நங்காஞ்சி அணையின் உபரி நீரை ரங்கமலையில் இருந்து உற்பத்தியாகும் ஓடைகளில் விடப்படுமா?
நங்காஞ்சி அணையின் உபரி நீரை ரங்கமலையில் இருந்து உற்பத்தியாகும் ஓடைகளில் விடப்படுமா? என விவசாயிகள் எதிா்பார்த்துள்ளனா்.
நங்காஞ்சி ஆறு
திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டையில் உள்ள நங்காஞ்சி ஆற்று அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் இடையகோட்டை, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வழியாக சென்று அமராவதி ஆற்றில் கலக்கிறது. இந்த உபரி நீரை ரங்கமலையில் இருந்து உற்பத்தியாகும் 4 ஓடைகளில் விட ேவண்டும். இதில் முதல் ஓடை அரவக்குறிச்சி அருகே ரங்கமலையில் இருந்து ஆர்.புதுப்பட்டி, ஆர்.ஜி.வலசு, ஒலிகரட்டூர், செல்லிவலசு வழியாக சீத்தப்பட்டி அருகே நங்கஞ்சி ஆற்றில் இணைகிறது.
2-வது குப்பையக்கா ஓடை ரங்கமலையில் இருந்து மலைப்பட்டிக்கு மேல்புறமாக சென்று புளியம்பட்டி, வரப்பட்டி, பூமதேவம், அரண்மனைத்தோட்டம், லிங்கநாயக்கன்பட்டி, நடூர், பள்ளப்பட்டி ஷா நகர் வழியாக ஓட்டனை அருகே சென்று நஞ்காஞ்சி ஆற்றில் இணைகிறது.
தண்ணீர் பிரச்சினை இருக்காது
3-வது ஓடை ரங்கமலையில் இருந்து ெதாடங்கி மலைப்பட்டி, எரமநாயக்கனூர், அனுமந்தம்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, ஆண்டிபட்டிக்கோட்டை, தோப்புப்பட்டி, ஆண்டிபட்டி, குமாரபாளையம், ஓடப்பட்டிக்கு கீழ்புறமாக சென்று, பெத்தாட்சி நகர் அருகே குடகனாற்றில் இணைகிறது. இதனால் விவசாயம் செழிக்கும் மற்றும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினையே இருக்காது. குறிப்பாக அரவக்குறிச்சி, பள்ளபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் பிரச்சினை இருக்காது. எனவே இதகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதுகுறித்து அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்விவரம் பின்வருமாறு:-
தண்ணீர் பிரச்சினை தீரும்
செல்வராஜ்:- இந்த திட்டத்தின் மூலம் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் செழிக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும். இது ஒரு நதிநீர் இணைப்பு திட்டம் போன்ற சிறந்த திட்டமாகும். நங்காஞ்சி ஆறு குடகனாறு இணைப்பு திட்டமாகும். இத்திட்டத்தால் அரவக்குறிச்சி, சேந்தமங்கலம் கீழ் கிராமம், பள்ளப்பட்டி, இசட் -ஆலமரத்துப்பட்டி, மஞ்சுவளி, எருமார்பட்டி, சுற்றுவட்டார பகுதி கிராம விவசாயிகளின் நிலத்தடி நீர் பிரச்சினை அறவே தீரும்.
வாழ்க்கை தரம் உயரும்
சாமிநாதன்:- இடையகோட்டை நங்காஞ்சி ஆறு அணை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டது. தற்போது முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த அணையிலிருந்து மழைக்காலங்களில் 4,5 மாதங்களுக்கு உபரி நீர் வீணாக அமராவதி ஆற்றில் கலந்து கடலுக்குச் செல்கிறது. ஆனால் எங்கள் மேட்டு பகுதியை நம்பித்தான் விவசாயமே உள்ளது. மழை சரியாக பெய்யா விட்டால் குடிநீருக்கே சிரமப்படும் நிலை உள்ளது.எனவே வீணாகச் செல்லும் உபரி நீரை மட்டும் இந்த ஓடைகளில் இணைத்தால் மலைப்பட்டி எரமநாயக்கனூர் ஆண்டிபட்டி பகுதியில் ஓடைகளில் உள்ள தடுப்பணைகளில் நீர் தேங்கும். அனுமந்தம்பட்டி, ஓடைப்பட்டி பெத்தாச்சி நகர் குளங்களில் நீர் நிரம்பும். இதனால் விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயரும்.
ஆழ்துளை கிணறுகளில் நீர் அதிகமாகும்
பெரியசாமி:- எங்கள் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துக் கொண்டே உள்ளோம். ஆனால் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்ததிட்டத்தால் ஐந்தாறு தடுப்பணைகளிலும் நீர் தேங்கும். மேலும் லிங்கமநாயக்கம்பட்டி ஊராட்சி மற்றும் சேந்தமங்கலம் கீழ் ஊராட்சியிலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும். வறட்சியின் பிடியில் உள்ள பள்ளப்பட்டியின் கிழக்கு பகுதியான ஷாநகர் பகுதி மக்களுக்கும் ஆழ்துளை கிணறுகளில் நீர் அதிகமாகும். இதனால் குடிநீர் பிரச்சினை அறவே தீரும்.
தமிழக அரசு முன்வரவேண்டும்
தண்டபாணி:- மேட்டுப்பகுதிகளுக்கு நீர் கொண்டு செல்லும் அளவிற்கு இன்று தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. மேட்டுப்பகுதியில் ஆண்டு தோறும் பல லட்சங்கள் செலவில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் வாராமல் விவசாயிகளின் பொருளாதாரத்தை இழத்து வறுமையில் உள்ளனர். எனவே மானாவாரி விவசாயம் செய்யும் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக இந்த திட்டத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.