தலைஞாயிறு வாய்க்கால் தூர்வாரப்படுமா?


தலைஞாயிறு வாய்க்கால் தூர்வாரப்படுமா?
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புதர் மண்டி கிடக்கும் தலைஞாயிறு வாய்க்கால் தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மயிலாடுதுறை

மணல்மேடு:

புதர் மண்டி கிடக்கும் தலைஞாயிறு வாய்க்கால் தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

தலைஞாயிறு வாய்க்கால்

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள தலைஞாயிறு கிராமத்தில் தலைஞாயிறு வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் மணல்மேட்டிற்கு தெற்கே உள்ள வில்லியநல்லூர் அருகே பழவாற்றில் இருந்து பிரிந்து தலைஞாயிறு வழியாக திருநகரி வாய்க்காலை அடைகிறது.இந்த வாய்க்கால் மூலம் இப்பகுதியில் 1,250 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த வாய்க்கால் பாசன வாய்க்காலாகவும், வடிகால் வாய்க்காலாகவும் பயன்படுகின்றது.

புதர்மண்டி கிடக்கிறது

இந்த நிலையில் தலைஞாயிறு வாய்க்கால் கடந்த 3 ஆண்டிற்கு முன்பு தூர்வாரப்பட்டது. இதையடுத்து எந்தவித பராமரிப்பு பணிகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. தற்போது இந்த வாய்க்காலில் செடி, கொடிகள் வளர்த்து புதர் போல் காணப்படுகிறது. தலைஞாயிறிலில் இருந்து திருநகரி வாய்க்கால் வரை சுமார் 3 கி.மீ தூரத்திற்கு புதர்மண்டி கிடக்கிறது.

இதன் காரணமாக வயலுக்கு தண்ணீர் செல்ல முடியாமல் தடை ஏற்படுகிறது. வாய்க்கால் தூர்வாரப்படாததால் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் தண்ணீர் வெளியேற வழியின்றி வயல்களில் தேங்கி பயிர்கள் பாதிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

தூர்வார வேண்டும்

தலைஞாயிறு வாய்க்காலை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்குள் தலைஞாயிறு வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story