பள்ளிக்கூடங்களில் பயன்படாத 102 கட்டிடங்கள் இடிக்கப்படுமா? விபரீதம் நிகழும் முன் நடவடிக்கை தேவை
பள்ளிக்கூடங்களில் பயன்படாத 102 கட்டிடங்கள் இடிக்கப்படுமா? என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கற்க கசடற கற்பவை கற்றபின், நிற்க அதற்குத் தக என்ற திருவள்ளுவரின் குறளுக்கு ஏற்ப கற்றதை குற்றம் இல்லாமல் கற்று, அதன்படி நடக்க வேண்டும். இத்தகைய கல்வி அறிவை பள்ளிக்கூடங்கள் நமக்கு கற்று தருகிறது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை 1433 அரசு பள்ளிகள், 282 அரசு உதவி பெறும் பள்ளிகள், 436 மெட்ரிக் பள்ளிகள், 29 சுய நிதி பள்ளிகள், 38 சி.பி.எஸ்.இ. பள்ளிகள். ஒரு கேந்திர வித்யாலயா பள்ளி என மொத்தம் 2219 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இவற்றில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இது தவிர ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளும் இயங்கி வருகிறது. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் புத்தக அறிவையும், பொது அறிவையும் சேர்த்து கற்று கொடுத்து வருகிறார்கள். பெரியவர்களை மதித்தல், ஏழைகளுக்கு உதவி செய்தல் போன்ற நற்பண்புகளையும் கற்று கொடுக்கிறார்கள். நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை, செஞ்சிலுவை சங்கம் போன்ற இயக்கங்களின் வாயிலாக சேவை மனப்பான்மையையும், ஒழுக்கத்தையும் புகட்டி வருகிறார்கள்.
110 கட்டிடங்கள் இடித்து அகற்றம்
பள்ளியில் படிக்கும் மாணவன், வீட்டில் இருக்கும் நாட்களை விட பள்ளிகளில் இருக்கும் நாட்கள் தான் அதிகம். ஆகவே பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்கள் தான் குழந்தைகளை நன்றாக கவனித்து கொள்கிறார்கள். அதனால் தான் குருவாக எண்ணுகிறார்கள்.
இவ்வாறு கல்வி போதிக்கும் இடமாக உள்ள பள்ளிக்கூடங்களில் தற்போது வகுப்பறை கட்டிடங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. அவற்றில் சில கட்டிடங்கள் இடிக்கப்பட்டும், சில கட்டிடங்கள் இடிக்கப்படாமலும் உள்ளன. கடலூர் மாவட்டத்தில் சமீபத்தில் எடுத்த புள்ளிவிவரப்படி 82 பள்ளிகளில் 212 வகுப்பறை கட்டிடங்கள் சேதமடைந்து காணப்பட்டது. அதில் 110 வகுப்பறை கட்டிடங்கள் முற்றிலும் இடிக்கப்பட்டன. 102 கட்டிடங்கள் இடிக்கப்படாமல் உள்ளது.
பாதியில் நிறுத்தப்பட்ட பணி
அந்த கட்டிடங்களை வருகிற வடகிழக்கு பருவமழை காலத்திற்குள் இடித்து அகற்ற வேண்டும். இல்லையென்றால் மழைக்காலத்தில் வகுப்பறை கட்டிடங்கள் இடித்து விழுந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும். கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் நெல்லையில் உள்ள ஒரு தனியார் பள்ளி கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் சிலர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நிகழ்ந்த மறுநாளில் இருந்தே கடலூர் மாவட்டத்தில் மின்னல் வேகத்தில் பணி தொடங்கியது. அதாவது பள்ளிக்கூடங்களில் பழைய கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. அதன்பிறகு படிப்படியாக பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது பழைய கட்டிடங்கள் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
மரத்தடியில் பாடம்
சேதமடைந்த கட்டிடங்களில் வகுப்பறைகள் செயல்படுவதால் விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, கம்மாபுரம், புவனகிரி, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு அரசு பள்ளிகளில் மாணவர்கள் அச்சத்துடன் பாடம் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில பள்ளிகளில் போதிய கட்டிட வசதியின்றி மரத்தடியில் மாணவர்கள் பாடம் படித்து வருகிறார்கள். அதாவது சேதமடைந்த கட்டிடங்கள் அகற்றப்பட்டும் அதற்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்டவில்லை. இதன் காரணமாகவும் வகுப்பறைகள் மரத்தடிக்கு மாறி விடுகிறது.
சேத்தியாத்தோப்பு கிளாங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்குள்ள சேதமடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டு ஒரே கட்டிடத்தில் 3 வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பி.ஆதனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டி தரப்படவில்லை. கீரப்பாளையம் ஒன்றியம் பூதங்குடி ஊராட்சி அள்ளூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 3 கட்டிடம் இடிக்கப்பட்டு மாணவர்கள் கட்டிட வசதியின்றி மழை காலங்களில் அவதிப்பட்டு வருகின்றனர்.
கழிவறை வசதி
இதேபோல் குமாரகுடி, நங்குடி,. ஓடாக்கநல்லூர் உள்ளிட்ட பள்ளிகளிலும் போதிய வகுப்பறை கட்டிடங்கள் இன்றி செயல்படுகிறது. இதனால் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். ஆகவே புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் கழிவறைகளும் போதிய வசதி இன்றி உள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக சில பள்ளிகளில் 1200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவறைகள் இல்லை. பள்ளி கட்டிடங்கள் இருக்கும் இடங்கள் தவிர மற்ற இடங்கள் செடி, கொடிகள் முளைத்து புதராகவும் சில பள்ளிகளில் உள்ளது. இதையும் அகற்றி, தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும். குடிநீர், கட்டிட வசதி, சுகாதார வசதியும் அமைத்து தர கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதர் மண்டி கிடக்கிறது
இது பற்றி விருத்தாசலம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் கூறுகையில், எங்கள் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை 1800-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறோம். விருத்தாசலம் நகரை சுற்றியுள்ள மாணவிகளுக்கு என்று ஒரே பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இதனால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியாக இருந்த இந்த பள்ளிகூடம் தற்போது அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
எங்கள் பள்ளிக்கூடத்தில் 5 வகுப்பறைகள் கொண்ட ஒரு கட்டிடமும், ஒரு வகுப்பறை கொண்ட கட்டிடமும் பயன்படுத்த முடியாத அளவிற்கு பாழடைந்து கிடக்கிறது. இதனால் பள்ளிக்கூடத்தில் அமைத்துள்ள திறந்த வெளி தகர கொட்டகைகள் தான் எங்களுக்கு வகுப்பறையாக செயல்படுகிறது. மேலும் போதிய கட்டிட வசதி இல்லாததால், மரத்தடியில் அமர்ந்து தான் படித்து வருகிறோம். பள்ளி வளாகம் முழுவதும் புதர் மண்டி கிடப்ப தால் அடிக்கடி பாம்புகள் வந்து எங்களை அச்சுறுத்தி வருகிறது. குரங்குகள் தொல்லையும் அதிகமாக உள்ளது. அதனால் எங்களது பாதுகாப்பு வசதிக்காக புதிய வகுப்பறை கட்டிடங்கள் அமைத்து தர வேண்டும். மேலும் பள்ளி வளாகம் முழுவதையும் தூய்மைப்படுத்தி தர வேண்டும்.
கோவிலில் செயல்படும் பள்ளி
முகந்தெரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் நிலை பற்றி அந்த ஊரை சேர்ந்த வெற்றிவேல் கூறுகையில், எங்கள் ஊரில் உள்ள பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இங்கு சேதமடைந்த வகுப்பறை கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டார்கள். இதனால் வகுப்பறை இல்லாமல் அருகில் உள்ள கோவில் வாசலில் மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த நிலையை மாற்றி உடனடியாக புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். அப்போது தான் மாணவர்கள் சேர்க்கையும் அதிகரிக்கும் என்றார்.
முகந்தெரியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த இளநீர் வியாபாரி கமலக்கண்ணன் கூறுகையில், எங்கள் ஊரில் பள்ளி கட்டிடம் பழமை வாய்ந்ததாக இருந்தது. இதனை இடித்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதுவரை புதிய கட்டிடம் கட்டப்படவில்லை. இந்த கட்டிடம் கட்டுவது குறித்து பலமுறை அதிகாரிகள் பார்வையிட்டு சென்றதோடு சரி, ஆனால் கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றார்.