தஞ்சை அகழியில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா?
தஞ்சை அகழியில் ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தஞ்சை அகழியில் ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தஞ்சை அகழி
பண்டைய காலத்தில் மன்னர்கள் தங்கள் நாட்டு மக்களை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்கு கோட்டைகளை கட்டினர். அந்த கோட்டைக்குள் எதிரிகள் வராமல் இருப்பதற்காக கோட்டையை சுற்றிலும் அகழிகள் அமைத்தனர். இதில் முதலைகள், பாம்புகள் போன்ற கொடிய விலங்குகள் இருக்கும். இதை தாண்டி கோட்டைக்குள் செல்வது என்பது மிகவும் அரிது ஆகும்.
அந்த வகையில் தஞ்சை பெரியகோவிலை சுற்றிலும் அகழிகள் காணப்படுகிறது. இந்த அகழி தஞ்சை பெரிய கோவிலின் பின்பகுதியில் இருந்து தொடங்கி மேலஅலங்கம், வடக்கு அலங்கம், கீழ அலங்கம் வரை செல்கிறது. இந்த அகழிகளுக்கு கல்லணைக்கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதும், அகழி பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
நீர்மட்டம் உயரும்
இதே போல மேலவீதியில் இருந்து தென்கீழ்அலங்கம் பழைய திருவையாறு பஸ் நிலையம் வளாகம் வரை அகழி காணப்படுகிறது. இந்த அகழிக்கு பெரிய கோவிலை சுற்றியுள்ள அகழியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். அவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் அகழியில் நிரம்பி இருக்கும் போது அந்த பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயரும்.
மேலும், பொதுமக்கள் கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும் அகழி நீரை பயன்படுத்தி வந்தனர்.தற்போது இந்த அகழியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக அகழியில் பெயரளவுக்கே தண்ணீர் நிரப்பபடுகிறது.
ஆகாயத்தாமரைகள்
இதில் ஆகாயத்தாமரைகள் அதிகளவில் வளர்ந்து அகழி புதர்மண்டி காட்சி அளிக்கிறது. மேலும், சீக்கிரமாகவே அகழி நீரின்றி வறண்டுவிடுகிறது. இதனை பயன்படுத்தி அகழியை குப்பை கொட்டும் இடமாகவும் சிலர் பயன்படுத்தி வருகின்றனர்.
அகழி கரையோரங்களில் செடி, கொடிகள் வளர்ந்து விஷப்பூச்சிகளின் கூடாரமாகவும் திகழ்கிறது.அதுமட்டுமின்றி ஆகாயத்தாமரைகள், குப்பைகள் குவிந்து கிடப்பதால் அகழி பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
அகற்ற வேண்டும்
இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த பகுதியை மூக்கை மூடியபடி கடந்து சென்று வருகின்றனர். இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தஞ்சை அகழியில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.