திருத்துறைப்பூண்டி முள்ளியாற்றில் புதர் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?


திருத்துறைப்பூண்டி முள்ளியாற்றில் புதர் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 24 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காவிரிநீர் வந்தடைந்தும் வயல்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் திருத்துறைப்பூண்டி முள்ளியாற்றில் புதர் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை அகற்றப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

காவிரிநீர் வந்தடைந்தும் வயல்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் திருத்துறைப்பூண்டி முள்ளியாற்றில் புதர் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை அகற்றப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

முப்போக சாகுபடி

டெல்டா பாசனத்திற்காக கடந்த 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடைந்தது. பின்னர் கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்று பருவமழை முறையாக பெய்தால் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படும்.

உரிய நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாததாலும் செடி, கொடிகள், ஆகாயத்தாமரைகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் காவிரி நீர் கடைமடை பகுதியில் உள்ள வயல்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை

கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், திருத்துறைப்பூண்டியின் முக்கிய பாசன ஆறான முள்ளி ஆற்றுக்கு வந்தடைந்துள்ளது. ஆனால் ஆற்றில் பெருமளவு ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளதால் தண்ணீர் செல்ல முடியாமல் தடைப்படுகிறது. இப்போதே இந்த நிலை என்றால் தண்ணீர் குறைவாக வரும் போது கடைமடை பகுதிகளுக்கு செல்லாது. தண்ணீர் வேகமாக அனைத்து பகுதிகளுக்கும் சென்றால் தான் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியும். இந்த காவிரி நீரை நம்பி டிராக்டர் மற்றும் மாடுகளை வைத்து உழுது வயல்களை குறுவை சாகுபடிக்கு தயார் நிலையில் வைத்துள்ளனர். திருத்துறைப்பூண்டி பகுதியில் குறுவை சாகுபடி சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் நடைபெறும் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதை தடுக்கும் வகையில் முள்ளியாற்றில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தூர்வார வேண்டும்

இதுகுறித்து விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் பாஸ்கர் கூறுகையில் திருத்துறைப்பூண்டி முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள பகுதி. சரியான பருவமழை பெய்யாவிட்டாலும், கர்நாடகாவில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் வழங்காவிட்டாலும் விவசாயம் செய்ய முடியாது. விவசாயிகள் தங்கள் நகைகளை அடகு வைத்து சாகுபடி செய்து வருகின்றனர். முள்ளியாற்றில் ஆகாயத்தாமரைகள் மண்டி கிடப்பதால் கடைமடை வரை தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆறு மற்றும் வாய்க்கால்களை ஆய்வு செய்து ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வார வேண்டும் என்றார்.

விளைநிலங்கள் பாதிக்கப்படும்

இதுகுறித்து விவசாயி பரமசிவம் கூறுகையில், திருத்துறைப்பூண்டி முள்ளியாற்றில் ஆகாயத்தாமரைகள் புதர் மண்டி கிடக்கிறது. இந்த ஆற்றின் மூலம் பாசன வசதி பெறும் விளைநிலங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

விவசாயிகள் குறுவை சாகுபடிக்காக தங்களது வயல்களை உழுது தயார்படுத்தி தண்ணீருக்காக காத்திருந்தனர். ஆனால் முள்ளியாற்றில் ஆகாயத்தாமரைகள் படர்ந்து இருப்பதால் கடைமடை வரை தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் உடனடியாக ஆகாயத்தாமரைகளை அகற்றி கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story