மேல் முறையீட்டு வழக்கு வெற்றி பெறுமா? - ஒரு வார்த்தையில் பதில் கூறிய ஓபிஎஸ்
அதிமுக பொதுக்குழு தொடர்பாக மேல் முறையீட்டு வழக்கு வெற்றி பெறுமா? என்ற கேள்விக்கு நீதியின் தீர்ப்பை பொறுத்து உள்ளது உன ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்.
சென்னை,
அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியதற்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதேபோல், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்வது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, அதிமுக வழக்கு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என ஒரே வரியில் தெரிவித்து சென்றார்.
இந்நிலையில், தேனியில் இருந்து விமானம் மூலம் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை சென்றார். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
தந்திர போராட்ட வீரர் வஉசி நினைவு இல்லம் பராமரிப்பு இல்லாமல் இருப்பது தொடர்பாக விரைவில் அறிக்கை வெளியிடுவேன் என்றார்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கு வெற்றி பெறுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நீதிபதியின் தீர்ப்பை பொறுத்து தான் உள்ளது என பதிலளித்தார்.
புதுமைப் பெண் திட்டம் குறித்த கேள்விக்கு, நீடூடி வாழ்க என புன்னகையுடன் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தாலிக்கு தங்கம் திட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதுமைப் பெண் திட்டமாக மாற்றப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.