கோரையாற்றில் பாலம் கட்டப்படுமா?


கோரையாற்றில் பாலம் கட்டப்படுமா?
x
தினத்தந்தி 3 Sept 2023 12:15 AM IST (Updated: 3 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அருகே கோரையாற்றில் பாலம் கட்டப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

திருவாரூர்

கோட்டூர்:

கோட்டூர் அருகே கோரையாற்றில் பாலம் கட்டப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கோரையாற்றில் பாலம் இல்லை

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள தேவதானம், ஒட்டாங்காடு, புத்தன்கோட்டகம், காரைக்காரன்வெளி ஆகிய கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் பல்வேறு தேவைகளுக்காக பெருகவாழ்ந்தான் பகுதிக்கு செல்வது வழக்கம்.

அங்கு போலீஸ் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருந்தகம், மேல்நிலைப்பள்ளி, வங்கிகள் உள்ளன. முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, மன்னார்குடி, தஞ்சை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வதற்கும் பெருகவாழ்ந்தான் செல்ல வேண்டும். தேவதானம் ஊராட்சி பகுதி மக்கள் பெருகவாழ்ந்தான் பகுதிக்கு கோரையாற்றை கடந்து செல்ல வேண்டி உள்ள நிலையில் கோரையாற்றில் பாலம் இல்லை.

சுற்றுப்பாதையில் பயணம்

இதனால் தேவதானத்தில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ள பெருகவாழ்ந்தானுக்கு 10 கி.மீ. சுற்றுப்பாதையில் செல்ல வேண்டி உள்ளது. பள்ளி- கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் தங்கள் அவசர தேவைகளுக்காக தேவதானம் -பட்டிமார் இடையே கோரையாற்றில் குறுகலாக காணப்படும் மதகு பாலத்தின் மீது நடந்து செல்கிறார்கள்.

இந்த மதகு பாலம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. சேதம் அடைந்து காணப்படும் இந்த மதகு பாலத்தில் மக்கள் ஆபத்தான முறையில் பயணித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

சிறுவர்கள் அச்சம்

மண்ணுக்குமுண்டான் ஊராட்சி பட்டிமார் மேட்டுக்கோட்டகம் ஆகிய கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த குடும்பங்களை சேர்ந்த 1 முதல் 8-ம் வகுப்பு வரை படித்து வரும் சிறுவர், சிறுமிகள் தேவதானம் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கு கோரையாற்றில் அமைந்துள்ள மதகு பாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

10-க்கும் மேற்பட்ட மதகுகளை கொண்ட இந்த பாலத்தின் ஒரு பகுதியில் உள்ள சுவர் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் பாலத்தை அச்சத்துடன் கடந்து சென்று வருகிறார்கள்.

கிராம மக்கள் கோரிக்கை

பட்டிமார், தேவதானம் ஆகிய கிராமங்களில் இருந்து வேலைக்கு செல்பவர்கள் ஆபத்தை உணராமல் இருசக்கர வாகனங்களை இந்த பாலம் வழியாக ஓட்டி செல்கின்றனர். பட்டிமார்-தேவதானம் இடையே செல்லும் கோரையாற்றின் குறுக்கே மக்கள் போக்குவரத்துக்கான பாலம் கட்ட வேண்டும் என்பது கிராம மக்களின் பல ஆண்டுகால கோரிக்கை.

ஆனால் இதற்கான எந்த ஒரு அடிப்படை பணிகளும் இதுவரை தொடங்கவில்லை. கோரையாற்றில் பாலம் இல்லாததால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக கிராம மக்கள் கூறுகிறார்கள். எனவே கோரையாற்றின் குறுக்கே கனரக வாகனங்கள் சென்று வரக்கூடிய அளவில் பெரிய பாலம் கட்டுவதற்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Next Story