மேகதாதுவில் அணை கட்டப்படும் என அறிவித்த கர்நாடக அரசுக்கு முதல்-அமைச்சர் கண்டனம் தெரிவிப்பாரா? -அண்ணாமலை கேள்வி


மேகதாதுவில் அணை கட்டப்படும் என அறிவித்த கர்நாடக அரசுக்கு முதல்-அமைச்சர் கண்டனம் தெரிவிப்பாரா? -அண்ணாமலை கேள்வி
x

மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டப்படும் என அறிவித்த கர்நாடக அரசுக்கு முதல்-அமைச்சர் கண்டனம் தெரிவிப்பாரா? என மதுரையில் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

மதுரை


மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டப்படும் என அறிவித்த கர்நாடக அரசுக்கு முதல்-அமைச்சர் கண்டனம் தெரிவிப்பாரா? என மதுரையில் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

அண்ணாமலை பேட்டி

கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என நக்கீரர் கூறியதற்கு காரணம், எந்த குற்றத்திற்கும் ஆதாரம் வேண்டும் என்பதுதான். மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணை நடைபெறுகிறது. ஆனால் கைது செய்தே ஆக வேண்டும் என்பதை ஏற்க முடியாது. வைரமுத்து மீது கூட 19 குற்றச்சாட்டுகள் உள்ளன.

நடைபயணம்

ஜூலை 9-ந் தேதி என் நடைபயணத்தை தொடங்க இருக்கிறேன். ராமேசுவரத்தில் இருந்து தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் தேசிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எந்த விதத்திலும் தவறு செய்யவில்லை. அவர் தன் கருத்தை சொல்லி உள்ளார். அதை அவர் மறுக்கலாம். ஆனால் அவர் வகித்த துறையை மாற்றி இருப்பது திராவிட மாடல் அரசில் யாருக்கும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதைத்தான் காட்டுகிறது.

பழனிவேல் தியாகராஜனுக்கும்., எங்களுக்கும் கருத்தியல் அடிப்படையில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் அவர் படித்தவர் என்கிற பெருமை இருக்கிறது. பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரை நிதித்துறையில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். இது மதுரை மண்ணுக்கு தி.மு.க. செய்துள்ள மாபெரும் துரோகமாக பார்க்கிறோம்.

வருமானவரி அதிகாரிகள்

வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகள் தயாராக இருக்கிறார்களா? என்பது தெரியவில்லை.

உக்ரைன் போன்ற வெளிநாட்டில் படித்த மாணவர்களை இந்தியாவுக்குள் மாற்ற வேண்டும் என்றால், மாநில அரசு தயாராக இருக்க வேண்டும். உக்ரைனை பொறுத்தவரை இன்னும் சில வருடங்களுக்கு மாணவர்கள் திரும்பி செல்ல முடியாது. இது முள் மீது பட்ட சேலை போல. இதற்கு ஒரு தீர்வை கண்டுபிடிப்பார்கள். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

முதல்-அமைச்சர் வெளிநாடு பயணம்

தமிழக முதல்- அமைச்சரின் வெளிநாட்டு பயணம் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும். அவர் தமிழகத்தை மட்டும் அல்ல, இந்தியாவை அடையாளப்படுத்த சென்றுள்ளார்.

இந்தியா தற்போது முதலீட்டை ஈர்க்கிறது. இதற்குக் காரணம் பிரதமர் மோடி தான். இந்த பயணத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் கோடியாவது ஈர்த்துள்ளாரா? என்று அறிய ஆவலாக இருக்கிறேன்.

ராகுல்காந்தி, சான் பிரான்சிஸ்கோ சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில், செங்கோலை படுக்க வைத்திருந்தார்கள், நிற்க வைத்திருந்தார்கள் என்றெல்லம் பேசி குற்றம் சாட்டியுள்ளார்.

செங்கோலையும், ஆதீனங்களையும் ராகுல்காந்தி அவமானப்படுத்தி உள்ளார். அதுவும் அமெரிக்க மண்ணில் இவ்வாறு பேசி உள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்து அவமானப்படுத்தியது போல, தற்போது செங்கோலையும் அவமானப்படுத்தி உள்ளார்கள்.

மேகதாது அணை

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கண்டிப்பாக கட்டப்படும் என கர்நாடக அரசு கூறியுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சிக்கு கொஞ்சமாவது மானம் ரோஷம் உள்ளதா?

பா.ஜனதா இந்த பிரச்சினையை டெல்லி வரை எடுத்துச் சென்று மேகதாதுவில் அணை கட்டப்படாது என்று சம்பந்தப்பட்ட மத்திய மந்திரியையே சொல்ல வைத்தோம். கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை கட்டுவோம் என்று சொல்லி இருந்தும் பதவி ஏற்பு விழாவுக்கு தமிழக முதல்-அமைச்சர் சென்றார். அங்கு அவரை பின்னுக்கு தள்ளி அவமானப்படுத்தினார்கள். ஆனால் மேகதாதுவில் அணை உறுதியாக கட்டுவோம் என்று மீண்டும் சொல்லி இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் கண்டன குரல் கொடுப்பாரா?

ஐ.பி.எல். போட்டி

ஐ.பி.எல். போட்டியின் மூலம், குஜராத் மாடலை திராவிட மாடல் வெல்லவில்லை. சென்னை அணியில் தோனி இருப்பதால் எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால், அதில் ஒரு தமிழர் கூட இல்லையென்றாலும் நமக்கு சென்னை அணியை பிடிக்கும். ஆனால் குஜராத் அணியில் 3 தமிழர்கள் விளையாடினர். கடைசி 2 பந்தில் 10 ரன்கள் அடித்த ஜடேஜாவின் மனைவி பா.ஜனதாவின் எம்.எல்.ஏ., ஆவார். ஜடேஜாவும் பா.ஜனதாவின் காரிய கர்த்தா. 2024-ல் இதுதான் நடக்கப்போகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story