கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளூரில் தங்காததால் விவசாயிகள், மாணவர்கள் பாதிப்பு கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் அவர்கள் பணியாற்றும் ஊரில் தங்காமல் வெளியூரில் பணியாற்றும் நிலை உள்ளது. எனவே கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தந்த ஊரிலேயே தங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வாணாபுரம்
கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் அவர்கள் பணியாற்றும் ஊரில் தங்காமல் வெளியூரில் பணியாற்றும் நிலை உள்ளது. எனவே கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தந்த ஊரிலேயே தங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கிராம நிர்வாக அலுவலகம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களின் நிர்வாகத்தை கிராம நிர்வாக அலுவலர் நிர்வகித்து வருகிறார். குறிப்பாக ஒன்று அல்லது இரண்டு கிராமங்களை மையமாகக் கொண்டு கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுலகம் மூலம் விவசாயிகள் தங்களுக்கு தேவையான சிட்டா, அடங்கள், பயிற்காப்பிடு, மருத்துவ காப்பிடு உள்ளிட்ட சான்றிதழ்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கு சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழுக்கும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் கையெழுத்து பெற வேண்டி உள்ளது.
இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணி செய்யும் இடங்களில் தங்குவது கிடையாது. அவர்கள் அந்த ஊரில் வசிக்காமல் வெளியூரில் வசிப்பதால் பணியிடத்துக்கு வருவதில் தாமதம் ஏற்படுகிறது.
கள ஆய்வு
இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது தற்போது அதிகளவில் கிராம நிர்வாக அலுவலர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதன் காரணமாக ஒரு கிராம நிர்வாக அலுவலர் 2 அல்லது 2 கிராமங்களில் கூடுதலாக பணியாற்றி வருகின்றனர். எங்களுக்கு கள ஆய்வு இருப்பதால் எங்களுக்கு மதியம் ஒரு மணி வரை மட்டுமே அலுவலகத்தில் இருப்போம். மீதமுள்ள நேரங்களில் விவசாய நிலங்களை கள ஆய்வு செய்வது மட்டுமல்லாமல் கூடுதலான பணிகளையும் பார்க்க வேண்டி உள்ளது என்கின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் கிராம நிர்வாக அலுவலர் வெளியில் சென்றால் தகவல் பலகையில் அது குறித்து எழுதி வைக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் அவர்கள் அவ்வாறு செயல்படுவது கிடையாது.இதனால் ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே இங்கு பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு அப்பகுதியிலேயே தங்கி பணியாற்றுவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு அரசு விடுதி வழங்கப்பட்டு பணி புரியும் கிராமத்தில் தங்குவதை அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றனர்.
பயோ மெட்ரிக்
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் அனைத்து துறை அரசு அதிகாரிகளுக்கும் வருகை பதிவேடு பயோமெட்ரிக் முறையில் உள்ளது. ஆனால் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அந்த விதிமுறைகள் கிடையாது. அதனால் சில கிராம நிர்வாக அலுவலர்கள்அலுவலகத்திற்கு வராமலேயே சென்று விடுகின்றனர்.
இந்த நிலையில் பருவ மழை தொடங்கியுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக அரசு பல்வேறு அதிகாரிகளை நியமனம் செய்து பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் பணிபுரியும் இடங்களில் தங்குவதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.