மஞ்சள் நிறத்தில் அரசு பஸ்கள் அறிமுகம்; பள்ளி, கல்லூரி வாகனங்களின் வண்ணம் மாறுமா?
மஞ்சள் நிறத்தில் அரசு பஸ்கள் அறிமுகமாகியுள்ள நிலையில் பள்ளி, கல்லூரி வாகனங்களின் வண்ணம் மாறுமா? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இளமையில் நாம் கற்கும் கல்வி முதுமை வரை வாழ்க்கைக்கு துணையாக இருக்கும். அதனால் தான் இளம் பருவத்தில் கல்வி கற்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளும் கல்விக்கு முக்கியத்துவம் தருகின்றன.
பெற்றோரின் அக்கறை
கல்வியின் அவசியம் கருதி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு வசதிகளை பெற்றோர் செய்து கொடுக்கின்றனர். கல்வியில் தன்னை விட சிறந்த நிலையை தனது பிள்ளைகள் அடைய வேண்டும் என்பதே பெற்றோரின் விருப்பம். எனவே பிள்ளைகளின் நலன்கருதி எவ்வளவு கட்டணம் என்று கூட கேட்காமல் தனியார் கல்வி நிறுவனங்களில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோரும் உண்டு.
அதுமட்டுமா? பள்ளி, கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் நடந்தோ அல்லது சைக்கிளிலோ செல்வதற்கு கூட சில பெற்றோர் சம்மதிப்பது இல்லை. நன்றாக படித்தால் போதும் என்று தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்கின்றனர். இன்னும் சிலர் ஆட்டோ, வேன்களில் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிக்கு அனுப்பி வைக்கின்றனர்.
பள்ளி, கல்லூரி வாகனங்கள்
பெற்றோரின் அக்கறையை மனதில் கொண்டும், மாணவ-மாணவிகளை ஈர்க்கும் வகையிலும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் வாகன வசதி செய்யப்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்கள் வேன், பஸ்களில் மாணவ-மாணவிகளை அழைத்து செல்கின்றனர்.
மாணவ-மாணவிகள் குடியிருக்கும் பகுதிக்கே வாகனங்கள் வருவதால், பெற்றோரும் குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் சேர்க்கின்றனர். காலையில் செல்லும் பிள்ளைகள் எப்போது வருமோ? எப்படி வருமோ? பாதுகாப்பாக வந்துவிடுமா? என்ற சந்தேகம் இல்லாமல் பெற்றோர் நிம்மதியாக தங்களுடைய வேலையை பார்க்க முடிகிறது.
மஞ்சள் நிற வாகனங்கள்
பள்ளி, கல்லூரிகளின் வாகனங்கள் தூரத்தில் வந்தாலும் மாணவ-மாணவிகள் உள்பட அனைவரும் எளிதில் அடையாளம் கண்டுவிடுவார்கள். அதற்கு வாகனத்தில் தனித்துவ நிறமே காரணம். எவ்வளவு வாகனங்களுக்கு நடுவே சிக்கி நெரிசலில் தத்தளித்தாலும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் தனியாக தெரியும்.
பள்ளி, கல்லூரி வாகனங்கள் என்றால் மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்று சின்ன குழந்தைகள் கூட சட்டென கூறிவிடுவார்கள். அந்த அளவுக்கு மஞ்சள் நிறமும், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களும் நினைவில் உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசலில் கூட பள்ளி, கல்லூரி வாகனங்களை கண்டுபிடித்து வழிவிடும் நிலை உள்ளது.
மஞ்சள் நிற பஸ்கள்
இந்த பள்ளி, கல்லூரி வாகனங்களின் தனித்துவமே கண்களை பறிக்கும் மஞ்சள் நிறமே காரணம். சாலையில் மஞ்சள் நிறத்தில் சென்றாலே பள்ளி, கல்லூரி வாகனங்கள் தான் என்ற நிலை இருக்கிறது. இரவில் செல்லும் போது கூட பள்ளி, கல்லூரி வாகனங்களை மஞ்சள் நிறத்தை வைத்து தனியாக கண்டுபிடித்து விடலாம்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மஞ்சள் நிறத்தில் 100 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே பள்ளி, கல்லூரி வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் இயக்கப்படும் நிலையில், அரசு பஸ்களும் மஞ்சள் நிறத்துக்கு மாறி இருக்கின்றன.
திண்டுக்கல், தேனி
இதனால் பள்ளி, கல்லூரி பஸ்களும், அரசு பஸ்களும் ஒரே நிறத்தில் வலம் வரும். திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளின் வேன்கள், பஸ்கள் என மொத்தம் 1,100 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் தேனி மாவட்டத்தில் 850 வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இங்கு மஞ்சள் நிறத்தில் அரசு பஸ்களை இயக்கினால் குழப்பங்கள் ஏற்படுமா? அல்லது பள்ளி, கல்லூரி வாகனங்களில் நிறம் மாற்றப்படுமா? என்பது குறித்து பல்வேறு தரப்பினர் கூறிய கருத்துகள் விவரம் வருமாறு:-
குழப்பத்தை ஏற்படுத்தும்
கல்வியாளர் சரவணன் (திண்டுக்கல்):- நீண்டதூர ஊர்களுக்கு செல்லும் அரசு பஸ்களை புனரமைத்து தனியாருக்கு இணையாக இயக்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரம் அரசு பஸ்களை மஞ்சள் நிறத்துக்கு மாற்றுவது குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே கல்வி நிறுவன வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கின்றன. மஞ்சள் நிறம் கல்வி நிறுவன வாகனங்களின் அடையாளமாக இருக்கிறது. அதேபோல் டவுன் பஸ்கள், பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் பஸ்கள், நெடுந்தூர பஸ்கள், குளிர்சாதன பஸ்கள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில் உள்ளன. அதன் நிறத்தை வைத்தே அது எந்த பஸ் என்று மக்கள் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் அரசு பஸ்களையும், மஞ்சள் நிறத்துக்கு மாற்றுவது பயணிகள், மாணவர்களுக்கு தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே பயணிகள், மாணவர்கள் குழப்பம் அடையாத வகையில் மாற்றங்களை கொண்டுவரவேண்டும்.
எந்த பயனும் இல்லை
சமூக ஆர்வலர் குப்புசாமி (பழனி):- பொதுவாக பள்ளி, கல்லூரி பஸ்கள் அனைத்தும் மஞ்சள் நிறத்திலேயே உள்ளன. அதை வைத்துதான் மாணவர்கள் அந்த பஸ்களை அடையாளம் கண்டு பயணித்து வருகின்றனர். இந்தநிலையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மஞ்சள் நிற பஸ்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் பெற்றோர்கள், பயணிகள் குழப்பம் அடைவார்கள். அதேபோல் கிராமப்புறங்களுக்கு செல்லும் பஸ்கள் பெரும்பாலும் தரமற்றதாகவே உள்ளன. எனவே அதனை முறையாக பராமரித்து இயக்க வேண்டும். அதை விடுத்து பஸ்களின் நிறத்தை மாற்றுவதில் எந்தவித பயனும் இல்லை.
மாற்றக்கூடாது
கல்வியாளர் விசுவநாதன் (கம்பம்):- பள்ளி, கல்லூரி வாகனங்களை பார்த்ததும் மாணவ-மாணவிகள் பயணம் செய்கிறார்கள், கவனம் தேவை என்பதை பிற வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கவே பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு மஞ்சள் நிறம் வழங்கப்பட்டது. மேலும் மஞ்சள் நிறம் கவனத்தை ஈர்ப்பதால் பள்ளி வாகன விபத்துகள் குறைகின்றன. இந்தநிலையில் அரசு பஸ்சுக்கும் மஞ்சள் நிறம் பூசப்படுவதால் பள்ளி வாகனங்களுக்கும், அரசு பஸ்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போகும் சூழல் உள்ளது. எனவே அரசு பஸ்களில் மஞ்சள் நிறத்தோடு பிற நிறங்களையும் சேர்த்து வித்தியாசத்தை காண்பிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு மஞ்சள் நிறம் தான் சரியானது. அதை மாற்றுவதற்கு எந்த முயற்சியும் அரசு செய்து விடக்கூடாது என்று நினைக்கிறோம்.
ஆசிரியை சுதா மணிகண்டன் (டொம்புச்சேரி):- அரசு பஸ்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் நிறம் மாற்றப்பட்டுள்ளது. தற்போது மஞ்சள் நிறத்தில் மாற்றப்படுவது, பள்ளிப் பஸ்களை போன்று இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலையோர கிராமங்களில் புறநகர் பஸ்கள் நிற்பதில்லை. டவுன் பஸ்கள் தான் நின்று செல்லும். இதனால் பஸ் நிறுத்தத்தில் உடைமைகளுடன் அமர்ந்திருக்கும் மக்கள் தூரத்தில் வரும் பஸ் புறநகர் பஸ்சா, டவுன் பஸ்சா என்பதை அதன் நிறத்தை வைத்தே அடையாளம் காண்கின்றனர். தூரத்தில் வரும் பஸ்சை பார்த்ததும் உடைமைகளை எடுத்துக்கொண்டு தயாராக நிற்பார்கள். தற்போது அரசு பஸ்களுக்கு மஞ்சள் நிறம் அடிப்பதால் தூரத்தில் வரும்போது அது அரசு பஸ்சா, பள்ளி பஸ்சா என்ற குழப்பம் ஏற்படலாம். எனவே அதை தவிர்க்க, அரசு பஸ்களின் முன்பகுதியில் கொஞ்சம் கூடுதலாக சில நிறங்களை கொடுக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.