முற்றிலும் சேதம் அடைந்த சாத்தனூர் இடதுபுற கால்வாய் சீரமைக்கப்படுமா?


முற்றிலும் சேதம் அடைந்த சாத்தனூர் இடதுபுற கால்வாய் சீரமைக்கப்படுமா?
x

சாத்தனூர் இடதுபுற கால்வாயில் பல இடங்கள் முட்புதர்கள் சூழ்ந்து சேதமாகி காணப்படுவதால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் விரயமாகி விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே போர்க்கால நடவடிக்கை எடுத்து முட்புதர்களை கால்வாயிலிருந்து சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை



சாத்தனூர் இடதுபுற கால்வாயில் பல இடங்கள் முட்புதர்கள் சூழ்ந்து சேதமாகி காணப்படுவதால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் விரயமாகி விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே போர்க்கால நடவடிக்கை எடுத்து முட்புதர்களை கால்வாயிலிருந்து சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாத்தனூர் அணை

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா சாத்தனூரில் 1953-ம் ஆண்டு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தண்ணீரை சேமிக்கும் வகையில் அப்போதைய முதல்-அமைச்சரான பெருந்தலைவர் காமராசர் ஆட்சி காலத்தில் 4 ஆண்டுகளுக்குள் மிகப்பெரிய அணை கட்டப்பட்டு 1957-ம் ஆண்டு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த அணையில் மழைக்காலங்களில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல்வாரத்தில் பாசனத்திற்காக திறக்கப்படுவது வழக்கம். அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் இடதுபுற கால்வாய் வழியாக 35 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. மேலும் பிரதான கால்வாய் வழியாக வரும் தண்ணீர் கிளை கால்வாய் வழியாக பிரிந்து தனித்தனியாக ஏரிகளுக்கு செல்கிறது.

அந்த வகையில் வாணாபுரம், குங்கிலியநத்தம், அகரம் பள்ளிப்பட்டு, சின்ன கல்லப்பாடி, பெரியகல்லப்பாடி, நரியாபட்டு, தலை யாம்பள்ளம், அள்ளிக்கொண்டபட்டு, பாவப்பட்டு, பறையம்பட்டு, நவம்பட்டு, பழையனூர் உள்ளிட்ட 40 ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இதன் மூலம் விவசாய கிணறுகளின் நீர்மட்டமும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

கேள்விக்குறி



அணையிலிருந்து பிரதான கால்வாய் முதல் கிளை கால்வாய் வரை தண்ணீர் சென்றது. ஆனால் தற்போது சேதமான கால்வாயில் தண்ணீர் செல்வது கேள்விக்குறியாக உள்ளது.

குறிப்பாக பிரதான கால்வாயில் தண்ணீர் வீணாகாமல் கடைமடைவரை செல்வதற்காக கால்வாயின் இரண்டு பக்கச்சுவர்கள் மற்றும் கீழ் பகுதிகளில் சிமெண்டு தளம் அமைக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கால்வாயை சரியாக பராமரிக்காததால் கால்வாய் முழுவதும் சேதமான நிலையில் இருப்பது மட்டுமல்லாமல் சில இடங்களில் தூர்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் தண்ணீர் திறந்து விடப்படும் காலங்களில் கால்வாய்களில் தண்ணீர் செல்வதில்லை.

இந்த நிலையில் பிரதான கால்வாயில் இருந்து 6 கிளை கால்வாய்கள் செல்கிறது. ஒவ்வொரு கால்வாயும் 6 முதல் 12 கிலோமீட்டர் தூரம் செல்கிறது. ஆனால் கிளை கால்வாய்களை தற்போது விவசாயிகள் தேடி கண்டறிய கூடிய சூழல் நிலவி வருகிறது. தூர்ந்து கிடக்கும் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று அரசு ஒவ்வொரு முறையும் நிதி ஒதுக்குகிறது. ஆனால் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்று தெரியவில்லை என்கின்றனர் விவசாயிகள்.

முற்றிலும் சேதம்

மேலும் சில பகுதிகளில் புதர்கள் நிறைந்தும் மண்மேடுகள் நிறைந்தும் பாறைகள் சரிந்தும் காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் தண்ணீர் திறந்து விடும் மதகுகள் முற்றிலும் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் எதிர்வரும் காலங்களில் கால்வாய்கள் முழுவதும் காணாமல் போகக்கூடிய சூழலும் நிலவி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-




வாணாபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன்: அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் குடிநீருக்காக மட்டுமல்லாமல் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எங்கள் பகுதியின் நீர் ஆதாரமாக விளங்கி வருவது சாத்தனூர் அணை மட்டுமே.கால்வாய்கள் முழுவதும் ஆங்காங்கே தூர்ந்து கிடப்பதால் தண்ணீர் சரியான முறையில் ஏரிக்கு வருவது கிடையாது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தூர்ந்து கிடக்கும் கால்வாய்களை சீரமைத்து முறையாக தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயிர்களை நாசமாக்குகிறது



பழையனூரைச் சேர்ந்த குணசேகரன்: ஒவ்வொரு ஆண்டும் திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி கரும்பு, நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வருகிறோம். இந்த நிலையில் கால்வாய்கள் முழுவதும் சேதம் ஏற்பட்ட நிலையிலும் செடி கொடிகள் அதிக அளவில் வளர்ந்து காணப்படுவதால் தண்ணீர் சரியான முறையில் வருவது கிடையாது.

சில இடங்களில் கால்வாயின் சுவரில் சேதம் ஏற்பட்டு மண் சரிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் கால்வாயில் அகலம் மிகவும் குறைநது வருகிறது. எனவே கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்.



அத்திப்பாடியைச் சேர்ந்த ரங்கநாதன்: எங்கள் விவசாய நிலம் கால்வாயின் அருகில் தான் உள்ளது. கால்வாய் முழுவதும் தூர்ந்து கிடப்பதால் கால்வாயில் அருகில் உள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் கசிந்து பயிர்களை நாசமாக்குகிறது.

எனவே கால்வாயை தூர் வாருவது மட்டுமல்லாமல் கால்வாயில் சுவர்கள் சேதமானதை கண்டறிந்து அதனை சீரமைத்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

எதிர்பார்ப்பு

எனவே எதிர்வரும் காலங்களில் கால்வாயை தூர்வாருவது மட்டுமல்லாமல் கரைகளில் இருக்கும் செடி கொடிகளை அகற்றி கால்வாயை பாதுகாப்பது மட்டுமே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story