கோரையாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி நிறைவு பெறுமா?
நீடாமங்கலம் அருகே கோரையாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி நிறைவு பெறுமா என மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் அருகே கோரையாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி நிறைவு பெறுமா என மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பாலம் கட்டும் பணி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் ெரயில்வேகேட் மூடப்படும் போதெல்லாம் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் நலன் கருதியும் கடந்தகால அ.தி.மு.க. ஆட்சியில் நீடாமங்கலம் அருகே மன்னை சாலையில் உள்ள தட்டி தெரு கொத்தமங்கலம் இடையே கோரையாற்றில் இணைப்பு பாலமும், பழைய நீடாமங்கலம் வையகளத்தூர் இடையே வெண்ணாற்றில் இணைப்பு பாலம் கட்டும் பணியும் தொடங்கியது.
2 ஆண்டுகளாக....
இதில் வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டும்பணி நிறைவடைந்து விட்டது. கோரையாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்கு தூண்கள் (பில்லர்கள்) கட்டப்பட்டு பாலம் கட்டும் பணிபாதியிலேயே நிற்கிறது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக பாலம் கட்டும் பணி நிறைவேற்றப்படாமல் இருப்பது குறித்து பொதுமக்கள் பல கேள்விகளை எழுப்புகின்றனர்.
பள்ளி மாணவர்கள்
இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கினால் நீடாமங்கலம் மட்டுமின்றி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் பயன்ெபறுவார்கள். குறிப்பாக பள்ளி, மாணவ- மாணவிகள் போக்குவரத்துக்கு இந்த பாலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து கோரையாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியை நிறைவு செய்து போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.