ஆற்றில் சேதமடைந்த தடுப்பணை சுவர் சீரமைக்கப்படுமா?
வடபாதிமங்கலம் அருகே ஆற்றில் சேதமடைந்துள்ள தடுப்பணை சுவர் சீரமைக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
வடபாதிமங்கலம் அருகே ஆற்றில் சேதமடைந்துள்ள தடுப்பணை சுவர் சீரமைக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
தடுப்பணை சுவர்
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில், புனவாசல் என்ற இடத்தில் அப்பகுதி விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வெண்ணாற்றின் குறுக்கே தடுப்பணை சுவர் கட்டப்பட்டது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டிலும் திறக்கப்படும் தண்ணீர், வெண்ணாற்றில் கடந்து செல்லும் போது, வடபாதிமங்கலம், புனவாசலில் ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணையில் போதிய அளவில் தேங்கி நிற்கும். இந்த தண்ணீர் பாசன வாய்க்கால்கள் வழியே சென்று புனவாசல், மாயனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வயல்களுக்கு சென்றடையும்.
சீரமைக்க வேண்டும்
இதன்மூலம், நெல், உளுந்து, பயறு, பருத்தி போன்ற பயிர்களை அப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை சுவர் நடுவில் இடிந்தும், இறங்கும் படிக்கட்டும் சேதமடைந்தும் உள்ளது.
இதனால், போதிய அளவில் தண்ணீர் தேங்கி நிற்காமல், தடுப்பணையில் இடிந்த பகுதி வழியாக தண்ணீர் சென்று விடுகிறது. இதனால், பாசன வாய்க்கால் மூலம் முறையான அளவில் தண்ணீர் செல்லாததால், ஒவ்வொரு ஆண்டிலும் சாகுபடி காலங்களில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, சேதமடைந்த தடுப்பணையை சீரமைத்து செய்து தர வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.