சேதமடைந்த தரைப்பாலத்தை அகற்றி விட்டு புதிதாக கட்டப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்த தரைப்பாலத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்த தரைப்பாலத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
தரைப்பாலம்
கூத்தாநல்லூர் வடபாதிமங்கலம் சாலையில் உள்ள நாகங்குடி என்ற இடத்தில் பழையனூர் பாசன வாய்க்கால் செல்கிறது.
இந்த பாசன வாய்க்கால் சாலையின் குறுக்கே செல்வதால், அதன் மேலே தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த பாசன வாய்க்கால் மூலம் அந்த பகுதியில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்த பாசன வாய்க்காலின் இரண்டு பக்கமும் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், ஒரு பக்கம் உள்ள தடுப்பு சுவர் இடிந்து விழுந்து அந்த இடத்தில் சாலையில் சரிவை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த இடத்தில் பள்ளமாக காட்சி அளிக்கிறது.
ஆபத்தான வளைவு
மேலும் தரைப்பாலம் அமைந்துள்ள பகுதியில் ஆபத்தான வளைவு உள்ளது. தடுப்புச்சுவர் இடித்து விழுந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அந்த இடத்தை கடந்து செல்லும் போது தடுமாறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
இந்த சாலை மன்னார்குடி, கூத்தாநல்லூர், தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், கொரடாச்சேரி, கோட்டூர், வடபாதிமங்கலம், மாவூர், திருத்துறைப்பூண்டி போன்ற முக்கிய ஊர்களையும், 100-க்கும் மேற்பட்ட கிராமப்புற பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது.
அகற்ற வேண்டும்
தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் சேதமடைந்த குறுகலான தரைப்பாலத்தை அகற்றி விட்டு, அகலமான புதிய தரைப்பாலம் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.