சேதமடைந்த தரைப்பாலத்தை அகற்றி விட்டு புதிதாக கட்டப்படுமா?
திருமருகல் அருகே சேதமடைந்த தரைப்பாலத்தை அகற்றி விட்டு புதிதாக கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்
திட்டச்சேரி:
திருமருகல் அருகே சேதமடைந்த தரைப்பாலத்தை அகற்றி விட்டு புதிதாக கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தரைப்பாலம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி சோமநாதர் கோவில் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பண்டாரவடை பாசன வாய்க்காலின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று உள்ளது.
அப்பகுதி பொதுமக்கள் திருமருகல் கடைத்தெரு, வங்கி, மார்க்கெட், பஸ் நிறுத்தம், யூனியன் அலுவலகம் மற்றும் பல்வேறு தேவைகளுக்கு இப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
பாசன வாய்க்கால்
இந்த நிலையில் இந்த தரைப்பாலம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மழை வெள்ள காலங்களில் தரைப்பாலத்திற்கு மேல்வழிந்து மழைநீர் செல்கிறது. தடுப்புச்சுவர் இல்லாததால் பள்ளி மாணவ-மாணவர்கள் பாதை தெரியாமல் வாய்க்காலில் தவறி விழுந்து விடுகின்றனர்.
மேலும் 250 ஏக்கருக்கு மேல் சாகுபடி நிலங்களுக்கு முக்கிய பாசன வாய்க்காலாகவும், இருப்பதால் தண்ணீர் போதிய அளவு கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நடவடிக்கை
இதுகுறித்து சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு ஆபத்தான தாரைப்பாலத்தை அகற்றி விட்டு புதிய தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.