ஆபத்தான தரைப்பாலம் சீரமைக்கப்படுமா?
சிக்கலில் ஆபத்தான நிலையில் உள்ள தரைப்பாலம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சிக்கல்:
சிக்கலில் ஆபத்தான நிலையில் உள்ள தரைப்பாலம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தரைப்பாலம்
நாகை மாவட்டம் சிக்கல் ஊராட்சி மெயின் சாலையில் இருந்து மடத்தான் தெரு, ெரயில் நிலையம் செல்லும் வழியில் தொம்பை வாய்க்காலில் தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
இந்த பாலம் வழியாக மடத்தான் தெரு, பொரவச்சேரி, சிக்கல் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆகியோர் சென்று வருகின்றனா. மேலும் அந்த பகுதியில் உள்ள வயல்களுக்கு விவசாயிகள் சென்று வருகின்றனர்.
ஆபத்தான நிலையில் காணப்படுகிறது
இந்த தரைப்பாலம் வழியாக தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தரைப்பாலம் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. பாலத்தின் இருபக்கங்களிலும் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தும், மரம் செடிகள் வளர்ந்து உள்ளது.
மேலும் பாலத்தின் நடுவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. எந்த நேரத்தில் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் பாலம் உள்ளதால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்குள் ஆபத்தான நிலையில் உள்ள தரைப்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.