பள்ளிபாளையத்தில் மேம்பால பணி விரைந்து முடிக்கப்படுமா?


பள்ளிபாளையத்தில் மேம்பால பணியை விரைந்து முடித்து போக்கு வரத்து பிரச்சினையை தீர்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

நிழற் கூடங்கள்

பள்ளிபாளையம் நகராட்சியில் சுமார் 30 ஆயிரம் விசைத்தறிகளும், ஏராளமான நூற்பாலைகளும் இயங்கி வருகின்றன. இந்த தொழில்களை நம்பி சுமார் 40 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

முதன்முதலாக ஊராட்சியாக இருந்த பள்ளிபாளையம், பேரூராட்சியாக மாறி பின்னர் தற்போது நகராட்சியாக தரம் உயர்ந்து உள்ளது. பள்ளிபாளையத்தில் உள்ள 4 முனை சந்திப்பு பஸ் நிறுத்தமாக இருந்து வருகிறது. நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட பஸ்களும் கனரக வாகனங்களும் இந்த சந்திப்பை கடந்து செல்கிறது.

ஆயிரக்கணக்கான மக்கள் இங்கிருந்து பஸ்களில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். பஸ்சுக்கா காத்திருக்கும் பொதுமக்கள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் சிரமத்திற்கு ஆளாகும் சூழல் இருந்தது. இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ. முயற்சியால், கடந்த 2015-ம் ஆண்டில் ரூ.66 லட்சம் செலவில் மிகப்பெரிய அளவில் 2 பயணிகள் நிழற் கூடங்கள் அமைக்கப்பட்டது.

மேம்பால பணி

அந்த நிழற் கூடங்கள் பொதுமக்களின் இலப்பாறும் கூடமாக இருந்தது. மேலும் வெயில் மற்றும் மழைக்காலங்களில் அதில் ஏராளமான பயணிகள் தஞ்சம் அடைவது வழக்கமாக இருந்து வந்தது. இங்கு பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

இதனிடையே தற்போது மேம்பாலம் கட்டப்பட்டு வருவதால், அந்த நிழற் கூடங்கள் அகற்றப்பட்டன. அதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் திருச்செங்கோடு சாலை வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் காவிரி ஆர்.எஸ். வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

அதனால் தற்போது பயணிகள் வெயில் மற்றும் மழை நேரங்களில் ஒதுங்குவதற்கு கூட இடம் இன்றி தவிக்கின்றனர். மேலும் வாகன போக்குவரத்துக்கும் கடும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. எனவே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதுவரை பயணிகள் பாதுகாப்புக்கு ஏதுவாக தற்காலிக பஸ் நிறுத்த கூடாரம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

விரைந்து முடிக்க வேண்டும்

இதுகுறித்து பஸ் பயணி லட்சுமி கூறியதாவது:-

நான் தினசரி கூலி வேலைக்கு தோக்கவாடி சென்று வருகிறேன். மேம்பால பணிகள் நடந்து வருவதால் பஸ்கள் மாற்று வழியில் பல்வேறு பகுதிகளை சுற்றிச் செல்கின்றன. அதனால் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்லூரி மாணவர் அக்பர் கூறியதாவது:-

தினந்தோறும் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வருகிறேன். தற்போது மேம்பால பணி நடைபெறுவதால், பஸ்சிற்காக நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. மேலும் பஸ்கள் சுற்றி செல்வதால் குறித்த நேரத்தில் கல்லூரிக்கு செல்ல முடிவதில்லை. மேலும் மழை மற்றும் வெயில் காலங்களில் சிரமமாக உள்ளது. விரைந்து மேம்பால பணியை முடித்து, நிழற் கூடங்களை அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story