தெற்கு ராஜன் வாய்க்கால் குறுக்கே உள்ள நடைபாலம் சீரமைக்கப்படுமா?


தெற்கு ராஜன் வாய்க்கால் குறுக்கே உள்ள நடைபாலம் சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 12 Jun 2023 12:15 AM IST (Updated: 12 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே தெற்கு ராஜன் வாய்க்கால் குறுக்கே உள்ள நடைபாலம் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே தெற்கு ராஜன் வாய்க்கால் குறுக்கே உள்ள நடைபாலம் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தெற்கு ராஜன் வாய்க்கால்

கொள்ளிடம் அருகே சோதியக்குடி ஊராட்சி கீரங்குடி கிராமத்தில் தெற்கு ராஜன் வாய்க்கால் குறுக்கே 30 ஆண்டுகளுக்கு முன்பு நடைபாலம் கட்டப்பட்டது. இதன் அடிப்பகுதியில் இரும்பு தூண்கள் பொருத்தப்பட்டும், மேல் பகுதியிலும் இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டு அதன் மேல் கான்கிரீட் கட்டைகள் போடப்பட்டு அனைவரும் சென்று வரும் வகையில் இந்த நடைபாதை பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த பாலத்தின் இரு புறங்களிலும் உள்ள கைப்பிடி கம்பிகள் வளைந்து முறிந்து விழும் நிலையில் உள்ளன. நடைபாலத்தில் அமைந்துள்ள சிமெண்டு கான்கிரீட் கட்டைகளும் உடைந்துள்ளன. கீரங்குடி மற்றும் கொன்னகாட்டு படுகை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கொள்ளிடம் ஆற்றங்கரை சாலை மற்றும் விளைநிலங்களுக்கு இந்த பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

கொள்ளிடம் கடைமடை

கொள்ளிடம் மற்றும் சிதம்பரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகளும் இந்த நடைபாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். கீரங்குடி மற்றும் அப்பகுதியில் உள்ள ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிக்கு மேய்ச்சலுக்கும் இந்த பாலத்தை தான் கடந்து செல்கிறது.

மேலும் அப்பகுதியில் உள்ள மயானத்துக்கு செல்லவும் இந்த நடைபாதை வழியாக தான் செல்ல வேண்டும்.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடும் இந்த நிலையில், இன்னும் 10 அல்லது 15 தினங்களில் கொள்ளிடம் கடைமடை பகுதிக்கு பிரதான தெற்கு ராஜன் வாய்க்காலில் தண்ணீர் வந்து சேரும்.

சேதமடைந்த நடைபாலம்

தண்ணீர் வாய்க்காலில் வந்தவுடன் பழுதடைந்துள்ள நடைபாதை பாலத்தை சரி செய்வது என்பது சிரமமான ஒன்று. எனவே தெற்கு ராஜன் வாய்க்காலில் தண்ணீர் வருவதற்குள் உடனடியாக அந்த நடைபாலத்தை சீரமைக்க வேண்டும் என்று கீரங்குடி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story