பழைய கட்டிடத்தில் இடப்பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்துக்கு மாற்றப்படுமா?
பழைய கட்டிடத்தில் இடப்பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருவதால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையை புதிய கட்டிடத்துக்கு மாற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தை 2-ஆக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்தது. அதன்படி கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் இயங்கி வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தற்காலிகமாக கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.
ரூ.381.76 கோடியில் புதிய கட்டிடம்
இதற்கிடையே மருத்துவக்கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை கட்டுவதற்கு கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூர் கிராமத்தில் 20.58 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடம் கட்ட மத்திய அரசு ரூ.195 கோடியும், மாநில அரசு ரூ.186.76 கோடியும் என ஆக மொத்தம் ரூ.381.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 4-ந்தேதி புதிய மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணி தொடங்கி பணிகள் முடிவடைந்தது. அதன்பிறகு பிரதமர் மோடி கடந்த ஜனவரி 12-ந்தேதி கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2021-22-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையின்போது சேர்ந்த 150 மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
நோயாளிகள் கடும் அவதி
ஆனால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மட்டும் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
ஆனால் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க போதிய இடவசதி, குடிநீர் வசதி இல்லை. மேலும் மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு தேவையான படுக்கைகள் அமைக்க போதிய இடவசதி இல்லாமல் சாய்தளம் அமைக்கப்பட்ட பகுதியில் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் அவசர சிகிச்சை வார்டுகள், பிரசவம் பார்க்கும் வார்டுகள் ஆகியவற்றில் போதிய இடவசதி இல்லாமல் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெறுபவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மாதந்தோறும் 700 பிரசவம்
தமிழகத்திலேயே அதிக பிரசவம் பார்க்கப்படுகிற முதல் 10 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் ஒன்று. இங்கு ஒவ்வொரு மாதமும் 650 முதல் 700 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது. இதேபோல் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் இந்த மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு சிறப்பு வாய்ந்த மருத்துவமனையில் போதுமான இடவசதி இல்லாமலும், நகரின் மைய பகுதியில் உள்ளதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் வாகனங்களும் அவ்வப்போது சிக்கி வரும் அவல நிலையும் உள்ளது.
புதிய கட்டிடத்துக்கு மாற்ற...
கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூரில் கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக்கல்லூரி பயன்பாட்டிற்கு வந்த நிலையில், 700 படுக்கை வசதிகளுடன் கூடிய 7 தளங்களை கொண்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நிறைவடைந்து, உபகரணங்கள் பொருத்தும் பணி நடைபெறுவதாக கூறப்படுகிறது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் நலன் கருதி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உபகரணங்கள் பொருத்தும் பணிகளை விரைந்து முடித்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.