ஜல்லி கற்கள் பெயர்ந்து கரடு முரடாக மாறிய சாலை சீரமைக்கப்படுமா?
ஆரப்பளம் ஊராட்சியில் போடப்பட்ட ஒரே ஆண்டில் ஜல்லி கற்கள் பெயர்ந்து கரடு முரடாக மாறிய சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கொள்ளிடம்:
ஆரப்பளம் ஊராட்சியில் போடப்பட்ட ஒரே ஆண்டில் ஜல்லி கற்கள் பெயர்ந்து கரடு முரடாக மாறிய சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
1 ஆண்டில் கரடு முரடாக மாறிய சாலை
கொள்ளிடம் அருகே ஆரப்பள்ளம் ஊராட்சியில் தெற்கு தெருவில் இருந்து கடப்பாடி பகுதி வரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை
2021-22-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் அமைக்கப்பட்டு ஒரே ஆண்டில் சாலையில் உள்ள ஜல்லிகள் அனைத்தும் பெயர்ந்து சாலை கரடு முரடாக மாறி உள்ளது..
காயம் அடைகின்றனர்
இந்த சாலையில் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிளில் செல்பவர்கள் ஜல்லி கற்களால் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்பவர்களின் கால்களில் கற்கள் குத்தி காயம் அடைக்கின்றனர்.
இந்த பகுதியில் வயல்கள் அதிக அளவில் இருப்பதால் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை எடுத்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
உளுந்து, பயறு ஆகியற்றை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்த சாலையை சீரமைத்தால் உளுந்து, பயறு ஆகியவற்றை அறுவடை செய்து வாகனங்களில் எடுத்து வர சிரமம் ஏற்படாமல் இருக்கும்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமைக்கப்பட்டு ஒரு ஆண்டில் ஜல்லி கற்கள் பெயர்ந்து கரடு முரடாக மாறிய சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.