அபராத உயர்வு விதிமீறலை தடுக்குமா?
அபராத உயர்வு போக்குவரத்து விதிமீறலை தடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மனித உயிர் விலை மதிப்பற்றது ஆகும். அதை உணர ஒருசிலர் தவறி விடுகின்றனர். அற்ப செயல்களால் சாலை விபத்தில் சிக்கி உயிரை இழந்து விடுகின்றனர். பலர் உடல் உறுப்புகளை பறிகொடுத்து நடைபிணமாக வாழ்கின்றனர்.
போக்குவரத்து விதிகள்
உயிரையும், உடலையும் பேணுவது உலகில் நமது வாழ்வை வளமாக்கும். இதற்கு வாகனங்களில் செல்லும் போது போக்குவரத்து விதிகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டியது அவசியம். இருசக்கர வாகனங்களில் செல்லும் போது ஹெல்மெட் அணிவது, மிதமான வேகத்தில் வாகனங்களை ஓட்டுவது, காரில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணிவது, மது போதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது போன்றவை முக்கியமானது.
இதில் அதிவேகமாக வாகனங்களில் செல்வது, மது போதையில் வாகனங்களை ஓட்டுவது ஆகியவை தன்னை மட்டுமின்றி பிறரையும் பாதிக்கும் செயலாகும். இந்த விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் விபத்தில் சிக்குவதோடு, பிற வாகனங்கள் அல்லது பாதசாரிகள் மீது மோதி அவர்களையும் விபத்தில் சிக்க வைக்கின்றனர். இதனால் உயிரிழப்பு, உடல் உறுப்புகளை இழப்பது அதிகரிக்கிறது.
அபராதம்
இதேேபால் வாகனங்களை ஓட்டுவதற்கு அடிப்படை தேவையான ஓட்டுனர் உரிமம், வாகனத்துக்கு இன்சூரன்ஸ், தகுதி சான்று போன்றவை இல்லாமல் வாகனங்களை ஓட்டுவோரும் பலருண்டு. இதுதவிர மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்தல், பிறருக்கு இடையூறாக ஏணி, கட்டில், கதவு, டிரம் உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்லுதல், சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் ஆட்களை ஏற்றி செல்வது, பாரத்துக்கு மேல் ஆட்களை அமர வைப்பது என்ற போக்குவரத்து விதிமீறல்கள் ஏராளம்.
இதனால் மனித உயிர் பறிபோவதை தடுக்க விதிமீறலில் ஈடுபடுவோரை பிடித்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர். ஆனால் எத்தனை முறை அபராதம் செலுத்தினாலும், தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடுவோர் பலர் உள்ளனர். எனவே சாலை விபத்துகளை தடுப்பது பெரும் சவாலாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது.
அபராத தொகை உயர்வு
இதனால் அனைவரும் சிரமமின்றி பாதுகாப்பாக பயணம் செய்வது அவசியம். அதற்கு போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது முக்கியம். எனவே தண்டனை அதிகமானால் தவறுகள் குறையும் எனும்ரீதியில் அபராத தொகை பலமடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இந்த அபராத தொகை உயர்வால் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பவர்கள் அதிகரித்து, விபத்துகள் குறையுமா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மக்கள், போலீஸ் அதிகாரியிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
விபத்தை குறைக்கும்
மோகனசுந்தர் (வடமதுரை) :- போக்குவரத்து விதிமீறலுக்கு அபராத தொகை உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்கது. அபராத தொகை அதிகமாக இருப்பதால் சாலை விதிகளை மீறாமல் முறையாக கடைபிடிப்பார்கள். ஒரு முறை தவறு செய்து அபராத தொகை செலுத்தினால், மறுமுறை தவறு செய்ய பயப்படும் நிலை ஏற்படும். இதனால் சாலை விபத்துகள் குறைந்து தேவையற்ற உயிர் சேதங்கள் தவிர்க்கப்படும்.
காயத்ரி (நத்தம் கோவில்பட்டி) :- சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் அபராத தொகை உயர்த்தப்பட்டு இருப்பது நல்ல விஷயம் தான். கனரக வாகனங்களுக்கு அதிக அபராதம் விதிப்பது பிரச்சினை இல்லை. ஆனால் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கான அபராதமும் பல மடங்கு உயர்ந்து இருக்கிறது. அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கூட மோட்டார் சைக்கிளில் தான் செல்கின்றனர். அவர்களுக்கு இது கூடுதல் தொகை தான். எனவே அபராத தொகையை சிறிது குறைத்தால் நல்லது. அதேநேரம் விபத்துகளை தவிர்க்க அனைவரும் விதிகளை கடைபிடிக்க வேண்டும்.
கணேஷ் (பழனி) :- அபராத தொகையை உயர்த்தியதால் விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்ற பயம் ஏற்படும். இதனால் சாலை விபத்துகள் பெருமளவில் குறையும் வாய்ப்பு உள்ளது. அதேநேரம் அபராத தொகை உயர்வு மிகவும் அதிகம். இதனால் அவசர தேவைக்கு செல்வோர், எதிர்பாராத வகையில் விதிமீறலில் சிக்கும் சாதாரண மக்கள் பெரிய தொகையை இழக்க நேரிடும். எனவே அபராத தொகையை குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
80 சதவீத விபத்துகள் குறையும்
திண்டுக்கல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரலாதன்:- பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்காததே காரணமாக இருக்கிறது. அதிவேகம், மதுபோதையில் வாகனங்களை ஓட்டுதல் ஆகியவை விபத்துகளுக்கு முக்கிய காரணம். மேலும் ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாதது உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு அபராத தொகை குறைவாக இருந்ததால், பலரும் மெத்தனமாக இருந்தனர். ஆனால் தற்போது அபராத தொகை உயர்த்தப்பட்டு இருக்கிறது. உதாரணத்துக்கு ஹெல்மெட் விலைக்கு இணையாக அபராதம் விதிக்கப்பட இருக்கிறது. எனவே ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உணர்வு ஏற்படும். மேலும் பொதுமக்களை விபத்தில் இருந்து காக்க வேண்டும் என்பதற்காக தான் அபராத தொகை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதனால் பலர் விதிகளை கடைபிடிப்பார்கள். அதன்மூலம் 80 சதவீத விபத்துகள் குறையும் வாய்ப்பு உள்ளது. எனவே அனைவரும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து விபத்துகளை குறைப்போம்.