ஏரிச்சாலை நகராட்சி வசம் ஒப்படைக்கப்படுமா?
கொடைக்கானலில் ஏரிச்சாலையை நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் புகழ் பெற்ற நட்சத்திர ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை சுற்றி 4 ஆயிரத்து 526 மீட்டர் சாலை உள்ளது. இந்த சாலையில் ஒரு பகுதி நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி நகராட்சி கட்டுப்பாட்டிலும் இருக்கிறது. ஏரியை சுற்றி பல்வேறு வளர்ச்சி பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதேபோல் நெடுஞ்சாலைத்துறை சார்பிலும் பல இடங்களில் பாலங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அந்த பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது.
ஏரிச்சாலையில் 2 துறைகளும் ஒரே இடத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருவதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தற்காலிகமாக நகராட்சி படகு இல்லம் செயல்பட்டு வரும் பகுதியில் சாலையை அகலப்படுத்தி பாலம் அமைக்கும் பணி கடந்த பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஏரிச்சாலை முழுவதையும் நகராட்சி வசம் ஒப்படைத்தால் அவர்கள் சீரமைப்பு பணியை முழுமையாக செய்ய வசதியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.