நெடுவாசல் கிராம மக்களின் வாழ்வாதாரம் காக்கப்படுமா?
நெடுவாசல் கிராம மக்களின் வாழ்வாதாரம் காக்கப்படுமா? என அக்கிராம மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நெடுவாசல் கிராமம்
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் நெடுவாசல் கிராமம் அமைந்துள்ளது. பெரம்பலூரில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த நெடுவாசல் கிராமம் கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்டது. நெடுவாசல் கிராமம் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராகும். இந்த கிராமம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை இயற்கை எழில் சூழ்ந்த செழுமை வாய்ந்த கிராமமாக இருந்தது. நெடுவாசல் கிராமத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்திற்கு வளம் சேர்க்கும் ஆறுகளில் மிக முக்கியமான ஒன்றாக விளங்கும் மருதையாறானது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் மலைக்குன்றுகளில் ஒன்றான பச்சைமலைத் தொடரின் கீழக்கணவாய், செல்லியம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தியாகி புதுநடுவலூர், நொச்சியம், விளாமுத்தூர், நெடுவாசல், க.எறையூர், பனங்கூர், குரும்பாபாளையம் வழியாக பயணித்து செல்கிறது. சுமார் 150 கோடி செலவில் கொட்டரை, ஆதனூர், குரும்பாபாளையம் பகுதியில் மருதையாறு நீர்த்தேக்கம் கட்டப்பட்டு வருகிறது. அந்த நீரானது மருதையாறு நீர்த்தேக்கத்தை நிரப்பி பிலிமிசை, கூடலூர் உள்ளிட்ட ஊர்களின் வழியாக பாய்ந்தோடி பிறகு அரியலூர் மாவட்டத்தில் நுழைந்து இறுதியாக கொள்ளிடத்தில் கலக்கிறது.
சுகாதார சீர்கேடு
இந்த மருதையாற்றின் கிளை ஓடைகளாக சிறுகன்பூர், கொளக்காநத்தம், மூங்கில்பாடி, பேரளி ஆகியவை உள்ளன. இதனுடன் நூற்றுக்கணக்கான சிற்றோடைகளும் உள்ளது. மாவட்டத்தின் பெருமை வாய்ந்த சங்கிலித்தொடர் ஏரிகளுள் ஒன்றான துறைமங்கலம் பெரிய ஏரியை நிரப்பி வெளியேறும் நீரானது ஒரு ஓடை வழியாக மருதையாற்றை சென்று அடையும் வண்ணம் கட்டமைப்பு உடையது. இந்த ஓடையில் உள்ள நெடுவாசல் கிராம பகுதியில் பெரம்பலூர் நகராட்சியின் பாதாள சாக்கடைக் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையமும், குப்பைக் கிடங்கும் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு முன்பு ஜப்பானிய தொழில்நுட்பத்தில் கழிவுநீர் முறையாக சுத்திகரித்து விடப்படும் என நெடுவாசல் மக்களிடம் அரசு வாக்குறுதி கொடுத்தது. ஆனால் ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே வெளியேற்றப்படும் நீரானது துர்நாற்றத்துடனும் அவ்வப்போது நுரை பொங்கியபடியும் ஓட ஆரம்பித்தது. இதனால் மருதையாறு மாசடைவதோடு, நெடுவாசல் கிராம மக்கள் பல்வேறு சுகாதார சீர்கேடுகள், நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை இன்றும் சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்சினைகள் தொடர்பாக பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் கொடுத்தும், போராட்டங்களை நடத்தியும் இன்னும் நிரந்தரத் தீர்வு காணப்படாத நிலையில் நீண்ட காலமாக உள்ளது. இது குறித்து நெடுவாசல் கிராம பொதுமக்கள் கூறியதாவது:-
பார்த்தாலே உண்மை நிலவரம் புரியும்
நெடுவாசலை சேர்ந்த சுப்ரமணியன்:- நெடுவாசல் கிராம எல்லையில், பெரம்பலூர் நகராட்சியின் பாதாள சாக்கடைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படும் போது உயர் தொழில்நுட்ப உதவியுடன் முறையாக சுத்திகரித்து விடப்படும் எனவும், அதில் நீங்கள் குளிக்கலாம், அந்த அளவிற்கு சுத்தமாக இருக்கும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் சில ஆண்டுகளிலேயே அனைத்தும் தலைகீழாக மாறிப் போனது. அங்கிருந்து ஓடையில் வெளியேற்றப்படும் நீரின் வண்ணம் மாறிப்போனது. அவ்வப்போது நுரை பொங்கியவாறும் ஓடுகிறது. நேற்று கூட நுரை பொங்கியவாறு ஓடியதோடு அருகில் செல்லும் போது துர்நாற்றமும் அதிக அளவு வீசுகிறது. இது தொடர்பாக ஆண்டுக்கணக்காக பல முறை மனுக்கள் கொடுத்தும், பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை. இதனை நேரில் வந்து பார்த்தாலே உண்மை நிலவரம் புரியும். நேற்று கூட நுரை பொங்கியவாறும் துர்நாற்றத்துடனும் நீர் ஓடியது. இந்த கழிவுநீர் பிரச்சினையால் எங்கள் கிராமம் மட்டும் பாதிக்கப்படவில்லை. மருதையாறு பாயும் அடுத்தடுத்த ஊர்களையும், சுமார் 4,190 ஏக்கர் பரப்பளவுள்ள பாசன நிலங்களுக்கு பாசனம் வழங்க உள்ள கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்தையும் பாதிக்கிறது. ஏரி, குளங்கள், ஆறுகள் சீரமைப்பில் தனிக்கவனம் செலுத்துவதோடு மக்கள் கோரிக்கைகளுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுத்து துரிதமாக பணியாற்றும் தற்போதைய மாவட்ட கலெக்டர் அவர்கள், மக்களின் நியாயமான இந்த கோரிக்கைகளை மனதில் கொண்டும், மக்களின் துயரத்தைக் கருதியும் இந்த பிரச்சினைக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து நிரந்தரத் தீர்வு காண ஆவண செய்ய வேண்டும்.
நிரம்பி வழிந்த சங்கிலித்தொடர் ஏரிகள்
சக்திவேல்:- பாதாள சாக்கடைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அருகிலேயே நகராட்சியின் குப்பைகள் கொட்டப்பட்டு மலை போலக் காட்சி அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குப்பைக் கிடங்கில் அவ்வப்போது தீப்பற்றி எரிந்தபோது அந்த பகுதியே புகை மூட்டத்துடன் காணப்பட்டு சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தியது. மேலும் அந்த பகுதியை கடந்து சென்றாலே துர்நாற்றம் வீசும் நிலையும் உள்ளது. குப்பைக் கிடங்கினால் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி குப்பைகளை விரைந்து அகற்ற வேண்டும் என்று தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சுமார் ரூ.3.18 கோடியில் பயோ மைனிங் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த 2020-ம் ஆண்டு பெய்த பெருமழையின் காரணமாக சங்கிலித்தொடர் ஏரிகள் நிரம்பி வழிந்தது. அப்போது, துறைமங்கலம் பெரிய ஏரியை நிரப்பி நீரை மருதையாற்றுக்கு கொண்டு சேர்க்கும் ஓடையில் நீர் பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறிய போது குப்பைக் கிடங்கு பகுதியில் இருந்த குப்பைகளையும் அடித்துச்சென்றதனால் நெடுவாசல் பகுதி மருதையாறு முழுவதும் குப்பைகளாக காட்சியளித்தது.
அதன் பிறகு பயோ மைனிங் திட்டத்தின் மூலம் குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் குப்பைகள் கொட்டப்படுவது அதிகரித்து உள்ளது. நேற்று மாலை குப்பைகள் கொட்டி இருக்கும் மேற்கு பகுதியில் தீப்பற்றி எரிவதை பார்க்க முடிந்தது. குப்பைகள் எரிவதால் காற்று மாசுபடுவதோடு சுவாச சம்பந்தமான பிரச்சினைகளும் ஏற்படுகிறது. மேலும் குப்பைகளில் இருந்து வெளியேறும் நச்சுக்களும் மழைக்காலங்களில் மருதையாற்றில் கலப்பதால் பல்வேறு தீங்குகளை ஏற்படுத்துகிறது. அதோடு அருகாமையில் உள்ள வயல்களுக்குச் செல்லும் கால்நடைகள் ஊசிகள் போன்ற மருத்துவக் கழிவு குப்பைகளால் பாதிக்கப்படுகிறது. இப்படி சுற்றுச்சூழல், மருதையாறு, மக்கள் நலன், நிலம், நீர், காற்று என அனைத்தையும் பாதிக்கும் குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகளை முறையாக அகற்றுவதோடு இனியும் இங்கு குப்பைகளை கொட்டாதவாறு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஊரை விட்டே வெளியேறும் நிலை...
சங்கர்:- பெரம்பலூர் பாதாள சாக்கடை கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல் நெடுவாசல் கிராம பகுதிக்கு தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. நெடுவாசல் கிராம எல்லையில் மருதையாற்றில் உள்ள 2 தடுப்பு அணைகளில் கழிவுநீர் தேங்கி நின்று வழிந்தோடுகிறது. அதில் ஒரு தடுப்பணை ஊருக்கு வெகு அருகிலேயே இருக்கிறது. இவைகளில் கழிவு நீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுத்தொல்லையும் அதிகமாக இருக்கிறது. இதனால் மக்கள் படும் துயரங்களை உணர்ந்ததோடு மக்களின் கோரிக்கையையும் ஏற்று தற்போதைய பஞ்சாயத்து தலைவர் ஊராட்சி மன்றத்தின் ஒப்புதலுடன் அரசிற்கு கோரிக்கை வைத்து ஒரு தடுப்பணை அகற்றப்பட்டுள்ளது. இதனால் அந்த இடத்தில் தற்போது கழிவுநீர் தேங்கி நிற்பது குறைந்துள்ளது.
ஆனால் நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை. கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் மருதையாற்று நெடுவாசலின் குறிப்பிட்ட பகுதியை தமிழ்நாடு அரசின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் சீரமைக்கும் பணிகள் நடந்துள்ளது.
மேலும் ஆற்றின் நடுப்பகுதியில் ஒரு வாய்க்கால் போல எடுத்துவிடப்பட்டு அதன் வழியாக கழிவு நீரானது சென்று கொண்டிருக்கிறது. இதை வரவேற்கிறோம். ஆனால் இது தற்காலிக தீர்வே.
இந்த நீண்ட கால பிரச்சினையால் விவசாயம் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீரும் உப்புத் தன்மையாக மாறிவிட்டது. நாங்கள் ஊரை விட்டே வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.
இந்த பிரச்சினைக்கு நிரந்தரமாக தீர்வு காண மாவட்ட நிர்வாகம், நகராட்சி, நீர்வளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அரசு நிர்வாகங்கள் விரைந்து முன் வர வேண்டும்.
கால்நடைகளுக்கும் பிரச்சினை
மஞ்சுளா:- நெடுவாசல் பகுதி மக்களாகிய நாங்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகிறோம். இந்த கழிவுநீர் பிரச்சினை கடந்த 2015-ம் ஆண்டு முதலே இருந்து வருகிறது. துர்நாற்றம் வீசும் தண்ணீரால் கொசுத்தொல்லை அதிகம் உள்ளது. இதனால் சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகளும் பெருகிக் கொண்டு தான் வருகிறது. கொசுத் தொல்லையால் இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்கக் கூட முடியாமல் தவித்து வருகிறோம். இதனால் நோய் தாக்கமும் ஏற்படுகிறது. தண்ணீரில் கலந்து வரும் கழிவு நீரில் காலை வைத்தால் அரிப்பு ஏற்பட்டு புண்ணாகி விடுகிறது. தண்ணீர் அவ்வப்போது நிறம் மாறிக்கொண்டு பொங்கி வருகிறது.
அதேபோல் அந்த நீரை கால்நடைகள் குடிப்பதால் கால்நடைகளுக்கும் பிரச்சினைகள் ஏற்படுகிறது. அருகாமையில் உள்ள கிணறுகளின் தன்மையும் மாறிவிடுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் மருத்துவ செலவிற்கு என்று தனியாக ஒரு தொகை செலவு ஆகின்றது. கடந்த 7 வருடங்களுக்கு மேலாக பல்வேறு போராட்ட நடத்தியும், மனுக்கள் கொடுத்தும் இந்த பிரச்சினை தொடர்ந்து வந்து கொண்டு தான் உள்ளது. மாவட்ட கலெக்டர் மக்கள் மற்றும் மருதையாற்றின் நலனில் அக்கறை கொண்டு இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும். அரசு நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என முன்னெடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் மருதையாற்றையும் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.