வடகாடு பகுதி விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படுமா?


வடகாடு பகுதி விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படுமா?
x

வடகாடு பகுதியில் வாழை வாழ வைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

புதுக்கோட்டை

வாழை உற்பத்தி

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு, மாங்காடு, அனவயல், புள்ளான்விடுதி, கொத்தமங்கலம், மறமடக்கி, கீரமங்கலம், குளமங்கலம் உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி, செவ்வாழை மற்றும் பஜ்ஜி, சமையலுக்கு உகந்த கறிவாழை ஆகிய ரகங்கள் இப்பகுதிகளில் முற்போகமும் விவசாயிகள் மூலமாக, உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட வாழைகள் கமிஷன் கடைகளிலும், மொத்த வியாபாரிகளிடமும் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

குறைவான விலைக்கே விற்பனை

மேலும் இப்பகுதிகளில் விளைந்த வாழைத்தார்கள் உள்ளூர் மட்டுமின்றி திருச்சி, மதுரை, சென்னை, திருப்பூர், கோவை, சேலம், திண்டுக்கல் உள்பட வெளி மாவட்டங்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு கூட மொத்த வியாபாரிகள் மூலமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் ஒரு சில சீசன் நாட்களை தவிர மற்ற நாட்களில் வாழைத்தார்கள் குறைவான விலைக்கே விற்பனை ஆகி வருவதாகவும், இதனால் வாழை விவசாயத்தில் போட்ட முதலீட்டை கூட எடுக்க முடியாத நிலை நீடித்து வருவதாகவும் விவசாயிகள் வருத்தப்பட்டு வருகின்றனர்.

கஜா புயலில் பாதிப்பு

முந்தய காலகட்டத்தில் வாழை மூலம் ஓரளவுக்கு நல்ல வருமானம் ஈட்டி வந்த வாழை விவசாயிகள் இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி கண்டு வந்தனர். அதன் பின்னர் போகப்போக நிலத்தடி நீர் மட்டம் வேறு வெகுவாக குறைந்து வந்தது. 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் சிக்கி இப்பகுதிகளில் வாழை மரங்கள் இருந்த இடம் தெரியாமல் போயின. அதோடு மட்டுமின்றி அதற்கு அடுத்த பேரிடியாக கொரோனா பெருந்தொற்று எனும் கொடிய நோயால் வாழைத்தார்களை வாங்குவாரின்றி வாழை மரங்களிலேயே பழுத்து பறவைகள் மற்றும் ஆடு, மாடுகளுக்கு கூட உணவாகி வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இப்பகுதிகளில் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட சீசன்களில் விளைந்த வாழைத்தார்கள் மட்டுமே ஓரளவுக்கு விற்பனை ஆகி வருவதாகவும், மீதமுள்ள மாதங்களில் விளைந்த வாழைத்தார்கள் முக்கால்வாசி வீணாகும் சூழல் நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறிய கருத்துகள் வருமாறு:-

செலவு செய்த பணத்தை கூட பெற முடியவில்லை

மாங்காடு பகுதியை சேர்ந்த விஸ்வநாதன்:- ஒவ்வொரு வாழைத்தார்களையும் உற்பத்தி செய்ய ரூ.200 முதல் ரூ.300 வரை செலவு ஆகிறது. ஆனால் ஒரு சில சமயங்களில் வாழைத்தார் ஒன்று ரூ.10-க்கு கூட விற்பனை ஆகி வருவதாகவும், இதனால் செலவு செய்த பணத்தை கூட திரும்ப பெற முடியாத சூழல் நிலவி வருகிறது என்றார்.

நார்களில் இருந்து துணிகள் உற்பத்தி

மாங்காடு பகுதியை சேர்ந்த விவசாயி கலைமணி:- வெளி மாவட்டங்களில் இருந்து பூ கட்டும் பணி மற்றும் கூடைகள் தயாரிக்க கூட வாழை மரங்களில் இருந்து கிடைக்கும் பட்டைகளில் மதிப்பு கூட்டும் முறையில் பெறப்பட்ட இவற்றை விற்பனை செய்து வருவதாகவும், ஒரு சில மாவட்டங்களில் வாழைமரப்பட்டைகளில் இருந்து பெறப்பட்ட நார்களில் இருந்து துணிமணிகள் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

ஆனால் இப்பகுதிகளில் ஆண்டாண்டு காலமாக வாழை உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இதுவரை வாழை மரங்கள் மதிப்பு கூட்டும் வகையில் எந்தவொரு பணிகளும் நடைபெறாத காரணங்களால் அரும்பாடுபட்டு விளைவித்த காய்கனிகள் வீணாகி வருகிறது. இதற்கு அரசு உரிய உதவி செய்து விவசாயிகளது வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story