ரூ.8 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பீடு: மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் தமிழக பட்ஜெட்டில் இடம்பெறுமா ?


ரூ.8 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பீடு:   மதுரை மெட்ரோ ரெயில் திட்டம்  தமிழக பட்ஜெட்டில் இடம்பெறுமா ?
x

தமிழக பட்ஜெட்டில் மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் இடம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி செலவாகலாம் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது.

மதுரை


தமிழக பட்ஜெட்டில் மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் இடம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி செலவாகலாம் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது.

போக்குவரத்து நெரிசல்

தமிழகத்தின் நெரிசல் மிகுந்த நகரங்களில் மதுரையும் ஒன்று. மதுரை இதயம் என்பது, 4 மாசி வீதிகளும், அதன் அக்கம்பக்கத்து பகுதிகளும்தான்.

வடபுறத்தில் வைகை ஆறு செல்கிறது. நாளுக்குநாள் பெருகிவரும் வாகனங்களால் மதுரை விழிபிதுங்கி நிற்கிறது. குறிப்பாக காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் என அன்றாட போக்குவரத்து ஒருபுறமும், தென்மாவட்டங்களுக்கான வர்த்தக மையம் என்பதால் சரக்கு போக்குவரத்து வாகனங்கள் மறுபுறமும், ஆட்டோக்களும் என நகருக்குள் வாகனங்கள் சென்றுவர முடியாமல் மக்களை தினமும் சிரமத்திற்கு ஆளாக்கி வருகின்றன.

குறையாத நெரிசல்

எத்தனையோ ஒருவழிப்பாதைகள், இருவழிப்பாதைகள் என நாள்தோறும் போக்குவரத்து மாற்றம் செய்தாலும் நெரிசல் என்பது குறைந்தபாடில்லை. அன்றாட பிழைப்புக்காக பிளாட்பாரங்கள் முழுவதும் கடைகள், ஆங்காங்கே தடுப்புகள் என பொதுமக்கள் நடப்பதற்கே சிரமப்படும் நிலை உள்ளது. ஆன்மிக சுற்றுலாதலமாக இருப்பதால் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வரும் மக்கள் நெரிசல் என அனைத்தையும் சகித்துக்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நெரிசலுக்கு தீர்வாக பொதுப்போக்குவரத்தை தேர்வு செய்ய முடியவில்லை. பஸ்கள் வந்து செல்லும் அளவுக்கு நகரின் வடிவமைப்பு இல்லை. அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதியும் ஏற்படுத்தப்படவில்லை.

சத்தியத்திற்கு கட்டுப்பட்டு இயங்குவது போல, வருடக்கணக்கில் இயக்கப்படும் வழக்கமான பாதையில் பஸ்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. சிலர் நகருக்குள் பஸ்சில் செல்வதற்கு பதிலாக நடந்தே சென்று விடலாம் என முடிவெடுக்கும் அளவுக்கு நெருக்கடி நிலவுகிறது.

மெட்ரோ ரெயில்

மாற்றுப்போக்குவரத்து திட்டம் தீர்வாகுமா? என்பது பரிசீலனையில் மட்டுமே உள்ளது. இதற்கிடையே, மாற்று போக்குவரத்துக்காக தமிழக அரசு சார்பில் மெட்ரோ ரெயில் அறிமுகப்படுத்தும் திட்டம் வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கை சமீபத்தில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இது குறித்து மெட்ரோ ரெயில்வே திட்ட இயக்குனர் அர்ச்சுனன் கூறியதாவது:-

நமது நாட்டில் முதன்முதலாக 1999-ம் ஆண்டு டெல்லியில் மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் 2007-ல் பெங்களூரிலும், 2011-ல் சென்னையிலும் தொடங்கப்பட்டது. நெரிசல் மிகுந்த நகரங்களில் விரைவான, பாதுகாப்பான பயணத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டம் பயன்படுகிறது.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் மத்திய, மாநில அரசு கூட்டு ஒப்பந்த அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பயணிகளை கையாள்கிறது.

மதுரையில், ஒத்தக்கடையில் இருந்து திருமங்கலம் வரையிலான 31 கி.மீ. தூரத்துக்கு இந்த திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு இருப்பதற்கான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கு சுமார் ரூ.8 ஆயிரம் கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வைகையில் சுரங்கப்பாதை

இதில் கோரிப்பாளையத்தில் இருந்து வசந்தநகர் வரையிலான பகுதியில் சுரங்கப்பாதை மூலம் ரெயில் இயக்க வேண்டியுள்ளது. இதற்காக தரைத்தளத்தில் இருந்து சுமார் 20 மீட்டர் வரை ஆழமான துளைகள் போட்டு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். வைகை ஆற்றை சுரங்கப்பாதை மூலம் கடக்க இருப்பதால் அதற்கான சாத்தியக்கூறும் ஆராயப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

1500 பேர் பயணம்

மெட்ரோ ரெயிலில் 6 பெட்டிகள் வரை இணைக்க முடியும். இதன்மூலம் ஒரே நேரத்தில் சுமார் 1,500 பயணிகள் வரை பயணம் செய்யலாம். இந்த திட்டத்துக்கு தமிழக அரசு வருகிற பட்ஜெட் சட்டசபை கூட்டத்தொடரில் அனுமதி அளித்து மத்திய அரசின் 50 சதவீத நிதி பங்களிப்பை பெற வேண்டும். இதன்மூலம் மதுரை நகரின் நெருக்கடி ஓரளவு குறைய வாய்ப்புள்ளது. அதாவது, அலுவலகங்களுக்கு தினசரி செல்பவர்கள், பொதுமக்கள் என இருசக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்கள் மெட்ரோ ரெயிலை பயன்படுத்தும் போது போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் அதிக ஆர்வத்துடன் இருப்பதாகவும், சொந்த ஊர் என்பதால், திட்டத்துக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்றும் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


Next Story