பொருள் பாதுகாப்பு கூடம் புதிதாக கட்டப்படுமா?


பொருள் பாதுகாப்பு கூடம் புதிதாக கட்டப்படுமா?
x
தினத்தந்தி 1 May 2023 12:15 AM IST (Updated: 1 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பழையாறு துறைமுக வளாகத்தில் பொருள் பாதுகாப்பு கூடம் புதிதாக கட்டப்படுமா? எனஅப்பகுதி மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

பழையாறு துறைமுக வளாகத்தில் பொருள் பாதுகாப்பு கூடம் புதிதாக கட்டப்படுமா? எனஅப்பகுதி மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பழையாறு துறைமுகம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. மாவட்டத்திலேயே சிறந்த துறைமுகமாக இருந்து வரும் இந்த துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள், பைபர் படகுகள் மற்றும் நாட்டுப்படுகுகள் மூலம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தினந்தோறும் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

மேலும் 2 அயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து வந்து துறைமுகத்தில் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இங்கு பிடிக்கப்படும் மீன்கள் வெளிநாடுகளுக்கும், கேரளா,ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பொருள் பாதுகாப்பு கட்டிடம்

இதேபோல் இங்கு பிடிக்கப்படும் மீன்களின் ஒரு பகுதி கருவாடாக உலர வைக்கப்பட்டு அவைகளும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு பிடிக்கப்படும் சில சிறு வகையான உணவுக்கு பயன்படாத மீன்கள் கோழி தீவனத்துக்காக நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த துறைமுக வளாகத்தில் அனைத்து வகையான பொருட்கள் வைப்பதற்கு பொருள் பாதுகாப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் மீனவர்கள் மீன்பிடி சாதனங்கள் மற்றும் பொருட்கள் வைத்து பாதுகாத்து வந்தனர். சுனாமி மறு சீரமைப்பு திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட இந்த கட்டிடங்கள் தற்போது மிகவும் சேதமடைந்து பயன்பாடின்றி மூடி கிடக்கிறது.

புதிய கட்டிடம்

இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில்:- துறைமுக வளாகத்தில் உள்ள பொருள் பாதுகாப்பு கட்டிடத்தில் மீன்பிடி பொருட்கள் மற்றும் சாதனங்களை வைத்து பராமரித்து வந்தோம். தற்போது இந்த கட்டிடங்கள் சேதமடைந்து மூடி கிடப்பதால் பொருட்களை பாதுகாக்க இங்கு வைத்து பாதுகாக்க முடியவில்லை.

இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதியதாக பொருள் வைக்கும் கட்டிடம் கட்டினால் அனைத்து வகையான பொருட்களையும் வைத்து பாதுகாக்க முடியும். எனவே பழையாறு துறைமுமுகத்தில் வேலையில் ஈடுபட்டு வரும் அனைத்து மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலன் கருதி சேதமடைந்த பழமையான கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய பொருள் பாதுகாப்பு வைக்கும் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story