அழிவின் விளிம்பில் இருந்து அகழி மீளுமா?


அழிவின் விளிம்பில் இருந்து அகழி மீளுமா?
x

தஞ்சையில் புராதன சின்னமாக போற்றப்பட வேண்டிய அகழியில் தூர் வாரும் பணி பாதியில் நிற்பதால், அழிவின் விளிம்பிலிருந்து மீளுமா? என்ற கேள்விக்குறி மக்களிடையே எழுந்துள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சையில் புராதன சின்னமாக போற்றப்பட வேண்டிய அகழியில் தூர் வாரும் பணி பாதியில் நிற்பதால், அழிவின் விளிம்பிலிருந்து மீளுமா? என்ற கேள்விக்குறி மக்களிடையே எழுந்துள்ளது.

அகழி

பாண்டியர்கள் படையெடுப்பால் சோழப் பேரரசு வீழ்ச்சியடைந்தபோது தஞ்சை நகரம் முழுவதும் தரைமட்டமாக்கப்பட்டது. பிற்காலத்தில் வந்த நாயக்கர் ஆட்சிக் காலத்தில் புதிய நகரம் உருவாக்கப்பட்டது. அப்போது, பெரியகோவிலை சுற்றி அகழி அமைக்கப்பட்டது. இதில் இருந்து சீனிவாசபுரம், மேல அலங்கம், வடக்கு அலங்கம், கொடிமரத்து மூலை, கீழ அலங்கம், தென் கீழ் அலங்கம், தெற்கு அலங்கம் வழியாக மீண்டும் பெரியகோவிலுடன் இணைக்கும் விதமாக அகழி அமைக்கப்பட்டது. ஏறத்தாழ 4 கிலோமீட்டர் தொலைவுள்ள இந்த அகழி 60 அடி ஆழமும், 200 அடி அகலமும் கொண்டது.

அந்த காலத்தில் சிவகங்கை குளம், செவ்வப்பநாயக்கன் ஏரிக்கு வரும் தண்ணீர் இந்த அகழிக்கு நீர் ஆதாரமாக இருந்தது. நீர் வரத்து குறைந்ததால், பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட கல்லணைக் கால்வாய் மூலம் அகழிக்கு நீர் வரத்து ஏற்படுத்தப்பட்டது. இந்த அகழியில் நீரோட்டம் இருக்கும்போது சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளிலும் நீர்மட்டம் உயர்ந்திருக்கும். கோடைகாலத்திலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாத அளவுக்கு இந்த அகழி இப்பகுதிக்கு பெரும் பயனாக இருந்து வந்தது.

படகுசவாரி

ஆனால், காலப்போக்கில் பராமரிப்பின்மை காரணமாக இந்த அகழி தண்ணீர் இன்றி வறண்டு கிடந்தது. இதனால், தெற்கு பகுதியில் உள்ள அகழி தூர்க்கப்பட்டு, அய்யாசாமி வாண்டையார் நினைவு பழைய பஸ் நிலையம், மாவட்ட மைய நூலகம், பாரத ஸ்டேட் வங்கி, மாநகராட்சி பள்ளி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டன. நீண்ட நெடுங்காலமாக பராமரிப்பின்றி புதர்கள் அடர்ந்திருந்த இந்த அகழி 9 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால், தூர் வாரப்பட்டு, படகு சவாரியும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், படகு சவாரி சில மாதங்களில் கைவிடப்பட்டது. தூர் வாரப்பட்ட அகழியும் பராமரிப்பின்மை காரணமாக மீண்டும் குப்பைகள் கொட்டுமிடமாகவும், கழிவு நீர் பாதையாகவும் மாறிவிட்டது.

இந்தநிலையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி செலவில் அகழி தூர் வாரப்பட்டு, இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து கீழ அலங்கம், வண்டிப்பேட்டையில் மட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சீனிவாசபுரம், செக்கடி பகுதியில் தூர்வாரப்பட்டது என்றாலும், இந்த பணி பல மாதங்களாக பாதியில் நிற்கிறது. இந்தநிலையில், இந்த அகழியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லணைக்கால்வாயில் இருந்து தண்ணீர் விடப்பட்டது.

மக்களிடையே கேள்விக்குறி

பெரும்பகுதி தூர் வாரப்படாமல் உள்ளதால், செக்கடியைக் கடந்து தண்ணீர் செல்லவில்லை. அடுத்த ஆண்டு நீரோட்டம் நின்றவுடன் மீதமுள்ள பகுதிகளிலும் தூர் வாருதல், தடுப்புச் சுவர் அமைத்தல் போன்றவை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். ஆனால், மீதமுள்ள பணி தொடங்கப்பட்டு, நிறைவேற்றப்படுமா? என்ற கேள்விக்குறி மாநகர மக்களிடையே நிலவுகிறது. இதனிடையே, இந்த அகழி வழக்கம்போல குப்பைகள் கொட்டுமிடமாகவும், புதர்கள் அடர்ந்த பகுதியாகவும் தொடர்கிறது. ஆகாயத் தாமரைச் செடிகளும் படர்ந்துள்ள நிலையில், கழிவு நீரும் தேங்கியிருப்பதால் கொசுக்கள் உற்பத்தி, துர்நாற்றம் உள்ளிட்ட சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. இதனால், சுற்றியுள்ள மக்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். புராதன சின்னமாகப் போற்றப்பட வேண்டிய இந்த அகழி தூர்ந்து, சுகாதார சீர்கேட்டின் அடையாளமாக மாறி வருவதால், சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தி நிலவுகிறது.

எதிர்பார்ப்பு

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, மற்ற ஊர்களில் புராதன சின்னங்கள் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது. ஆனால், தஞ்சையில் புராதன சின்னங்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால், அகழி முழுவதும் குப்பைகள் கொட்டுமிடமாக மாறி வருகிறது. நிறைய பேர் குப்பைகள் கொட்டுவதால், படிப்படியாக தூர்ந்து வருகிறது. இந்த அகழியை முறையாகப் பராமரித்து, படகு சவாரி ஏற்படுத்தினால், சுற்றுலா பயணிகளைக் கவரும். மேலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் நீர் ஆதாரம் பெருகுவதுடன், பெரியகோவிலுக்கும் பாதுகாப்பாக அமையும். இது, பழங்கால புராதனச் சின்னமாக இருப்பதால், இதை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றனர். எனவே நீண்ட நெடுங்காலமாக பராமரிப்பின்றி உள்ள இந்த அகழியை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் கிடைத்திருக்கும் நிதியை முழுமையாகப் பயன்படுத்தி சீரமைத்தால் மட்டுமே புராதன பெருமையை மீட்டெடுக்க முடியும் என்பது தஞ்சை மாநகர மக்களின் எதிர்பார்ப்பாகும்.


Next Story