விருதுநகர்-தேனி மாவட்டத்தை இணைக்கும் மலைப்பாதை திட்டம் நிறைவேறுமா?
விருதுநகர்-தேனி மாவட்டத்தை இணைக்கும் மலைப்பாதை திட்டம் நிறைவேறுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பயணம் என்பது அன்றாடம் மக்களிடம் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. பயண நேரமும், தூரமும் குறையும்போது அது மக்களுக்கு பல பயன்களை தருகிறது. விவசாயிகளின் பயண நேரம் குறைந்தால், உற்பத்தியான விளைபொருட்கள் வாடும் முன்பே சந்தைக்கு சென்றடையும். மாணவ-மாணவிகளின் பயண நேரம் குறைந்தால் அவர்கள் கற்பதற்கான நேரம் அதிகம் கிடைக்கும்.
2 மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
அந்த வகையில் விருதுநகர்-தேனி மாவட்டங்களுக்கு இடையிலான பயண நேரத்தை குறைப்பதற்காக புதிய சாலை திட்டத்தை பல ஆண்டுகளாக எதிர்பார்க்கின்றனர் இருமாவட்ட மக்கள். அதாவது, தேனி மாவட்டம் வருசநாடு அருகே காமராஜபுரம் கிராமம் உள்ளது. வருசநாட்டில் இருந்து விருதுநகர் செல்ல வேண்டும் என்றால் ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி வழியாக சுமார் 112 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும். இந்த பகுதிகளில் இருந்து விருதுநகர், ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, ராஜபாளையம் பகுதிகளுக்கு செல்லும் மக்கள் இவ்வாறு அதிக தூரம் பயணம் செய்ய வேண்டியது உள்ளது.
ெஜயலலிதாவின் முயற்சி
அதே நேரத்தில் காமராஜபுரத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் வழியாக கிழவன்கோவில் பகுதிக்கு சாலை அமைத்தால் குறுகிய தூரத்தில் சென்று விடலாம். இடையில் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் மட்டும் மலைப்பகுதியில் சாலை அமைத்தால் விருதுநகர் மாவட்டத்துக்கு எளிதில் சென்று விடலாம்.
இதற்காக காமராஜபுரம்-கிழவன் கோவில் மலைப்பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று இருமாவட்ட மக்களும் கால் நூற்றாண்டுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 2002-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு, தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, இந்த மலைப்பாதை திட்டப்பணிக்கு முயற்சி மேற்கொண்டார்.
பிளவக்கல் அணை
அப்போது தேனி மாவட்ட எல்லை வரை சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் வனத்துறை முட்டுக்கட்டை காரணமாக மேற்கொண்டு பணிகள் நடக்கவில்லை. வனத்துறை, நெடுஞ்சாலைத்துறையினர் பல கட்டமாக இங்கு ஆய்வு செய்துள்ளனர். ஆனால் இதுவரை சாலை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கிடையே இந்த வனப்பகுதி மேகமலை வன உயிரின காப்பகமாக அறிவிக்கப்பட்டது.
பின்னர், மேகமலை-ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இதனால், மலைப்பாதை திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் உருவானது.
கரடு முரடான இந்த மலைப்பாதையில் மக்கள் நடந்து சென்று வருகின்றனர். வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் இந்த பாதையில் மக்கள் தனியாக நடந்து செல்வதை தவிர்க்கின்றனர். குழுவாக நடந்து சென்று வருகின்றனர். இந்த வழியாக செல்லும் போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிளவக்கல் அணை எழில்கொஞ்சும் வகையில் காட்சி அளிக்கிறது.
விளைபொருட்கள்
வருசநாடு, காமராஜபுரம், வெள்ளிமலை போன்ற பகுதிகளில் முந்திரி, தக்காளி, கத்தரிக்காய், பீன்ஸ், அவரை, இலவம்பஞ்சு போன்றவை அதிக அளவில் விளைச்சல் அடைகின்றன. அவற்றை சந்தைக்கு எடுத்துச் செல்வதற்கு அதிக தூரம் பயணம் செய்ய வேண்டியது உள்ளதால், சரக்கு போக்குவரத்து செலவுக்கு கூட வருமானம் கட்டுப்படியாகவில்லை.
எனவே இந்த சாலை அமைக்கப்பட்டால் எளிதிலும், அதிக செலவு இல்லாமலும் விளைப்பொருட்களை 2 மாவட்டங்களில் உள்ள முக்கிய மார்க்கெட்டுகளுக்கு எடுத்துச்செல்ல முடியும். விவசாயிகளுக்கும் செலவு குறைந்து வருவாய் அதிகரிக்கும்.
இதனால் காமராஜபுரம்-கிழவன்கோவில் மலைப்பாதை திட்டம் நிறைவேற்றப்படுமா? என்று இருமாவட்ட மக்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறிய கருத்துகள் வருமாறு:-
வீணாகும் நேரம்
ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி:-
வருசநாட்டிலிருந்து தேனி, விருதுநகர் மாவட்டங்களை இணைக்கும் கிழவன்கோவில் பிளவக்கல் மலைச்சாலை திட்டம் கடந்த 27 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் காமராஜபுரம் பகுதியிலிருந்து வருசநாடு, மயிலாடும்பாறை, தேனி, உசிலம்பட்டி வழியாக 120 கி.மீ. சுற்றிக்கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம் செல்லும் நிலை நிலவுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுது நடைமுறைக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுத்தேன்.
ஆனால் வனத்துறையினர் இதற்கு முட்டுக்கட்டை போட்டதால் இந்த திட்டத்தினை இப்போது வரை செயல்படுத்த முடியாமல் உள்ளது. இந்த மலைப்பாதை திட்டத்தினை செயல்படுத்தினால் விருதுநகர், தேனி மாவட்டங்கள் மிகுந்த செழிப்பு மிகுந்த மாவட்டங்களாக திகழும். இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் பலமுறை சாலையை அமைத்திட வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை சாலை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் இருந்து விவசாய விளை பொருட்களை தேனி வழியாக விருதுநகர், மதுரைக்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு போக்குவரத்துச்செலவு மற்றும் நேரம் வீணாகி வருகிறது. இந்த திட்டத்தினை உடனே நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலதாமதம்
வத்திராயிருப்பை சேர்ந்த பெரிய மகாலிங்கம்:-
கிழவன் கோவில் முதல் வருசநாடு வரையிலான மலைப்பாதை திட்டம் என்பது பல ஆண்டு காலமாக நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தில் மலைப்பாதையில் 4 கி.மீ. தூரம் மட்டுமே சாலை போட வேண்டும். இந்த சாலை மலைப்பாதைகளில் வருவதால் வனத்துறையினர் நீண்ட காலமாகவே இதற்கு அனுமதி கொடுக்காமல் காலதாமதம் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த பாதையை முழுமையாக அமைக்க பொதுப்பணி துறையினர் மற்றும் வனத்துறையினர் பலமுறை ஆய்வு செய்தும் இந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் இரு மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் வருத்தத்தில் உள்ளனர். இரு மாவட்டத்தில் உள்ள விளைபொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் நிலவுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ச்சியாக ஆய்வினை நடத்தி இந்த மலைப்பாதை திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும்.
விவசாயிகள் பயனடைவார்கள்
காமராஜபுரத்தை சேர்ந்த சுப்பையன் கூறுகையில், "மலைப்பகுதியில் கஷ்டப்பட்டு விவசாயம் செய்கிறோம். அதை எடுத்துச் செல்வதற்கு அதிக செலவு ஆகிறது. இந்த சாலை அமைத்தால் விருதுநகர் மார்க்கெட்டுக்கு எளிதில் விளை பொருட்களை கொண்டு செல்வோம். கட்டுப்படியான விலை கிடைக்கும். விருதுநகர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் சென்று படிக்கவும் இப்பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்".
இவ்வாறு அவர்கள் கூறினர்.