மாவட்ட தலைநகரான சிவகங்கையில் வடமாநில ரெயில்கள் நிற்குமா?


மாவட்ட தலைநகரான சிவகங்கையில் வடமாநில ரெயில்கள் நிற்குமா?
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட தலைநகரான சிவகங்கையில் வடமாநில ரெயில்கள் நிற்குமா? என பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை என்றாலே வீரமங்கை வேலுநாச்சியார் தான் நினைவுக்கு வரும். சுதந்திர போராட்ட வீரர்களான மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் உள்ளிட்ட பலரின் வீரத்தையும் வெளிப்படுத்திய புண்ணிய பூமி இது. கடந்த 1985-ம் ஆண்டு மாவட்ட தலைநகராக ஆன சிவகங்கை தற்போது வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக மாறி வருகிறது.மேலும் வட மாநிலங்களில் இருந்து புண்ணிய தலமான ராமேசுவரத்திற்கு செல்லும் ரெயில் பாதை சிவகங்கை வழியாகத்தான் செல்கிறது. ராமேசுவரத்தில் இருந்து சிவகங்கை வழியாக சென்னைக்கு ஏற்கனவே தினசரி 2 ரெயில்கள் செல்கின்றன. இது தவிர வாரத்தில் மூன்று நாட்கள் சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

மேலும் ராமேசுவரம், காரைக்குடி மற்றும் விருதுநகர், காரைக்குடி போன்ற ஊர்களுக்கு பயணிகள் ரெயிலும் இயக்கப்படுகின்றன. இது தவிர அஜ்மீர், அயோத்தி, வாரணாசி ஆகிய இடங்களில் இருந்து ராமேசுவரத்திற்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலும் சிவகங்கை வழியாகவே தான் செல்கின்றன,

இதில் மற்ற ரெயில்கள் சிவகங்கையில் நின்று சென்றாலும் வட மாநிலங்களில் இருந்து ராமேசுவரத்துக்கு செல்லும் ரெயில்கள் சிவகங்கையில் நிற்காமல் செல்கின்றன.இந்த ரெயில்கள் சிவகங்கை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று பயணிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக ரெயில் பயணிகளின் கருத்து வருமாறு.:-

முன்பதிவு மையம் இல்லை

சிவகங்கை வர்த்தக சங்க தலைவர் அறிவு திலகம்:-.

சிவகங்கை மாவட்ட தலைநகரமாக உள்ளது. இங்கு ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் மற்றும் அரசு கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி போன்றவை உள்ளன. தினசரி சிவகங்கையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சென்னை செல்கின்றனர். ஆனால் இங்கு டிக்கெட் முன்பதிவு மையம் வசதி கிடையாது.

ஏற்கனவே செயல்பட்ட முன்பதிவு டிக்கெட் மையத்தையும் எடுத்து விட்டனர்.ஆன்லைன் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்யலாம் என்கிறார்கள.் ஆனால் சிவகங்கைக்கு என்று பயண இருக்கை கோட்டா ஏதும் கிடையாது. இதனால் சிவகங்கையில் இருந்து சென்னைக்கு டிக்கெட் புக்கிங் செய்து செல்வது மிக சிரமமாக உள்ளது.

தற்போது ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்வதிலும் பிரிமியம் தட்கல் என்ற முறை தான் உள்ளது. இதில் நிமிடத்திற்கு நிமிடம் கட்டணம் உயருகிறது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் ரெயில் பயணம் செய்வது கனவாகி வருகிறது.

மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும்

சிவகங்கையை பொறுத்தவரை இங்கு உள்ள வாகனம் நிறுத்துமிடம் எந்தவித வசதியும் இல்லாமல் உள்ளது. மேற்கூரை இல்லாததால் வெயில் மற்றும் மழையில் வாகனங்கள் நனைந்து சேதமடைகின்றன. ெரயில் நிலையத்திற்குள் பயணிகளுக்கு தங்கும் அறை வசதி செய்து தர வேண்டும். ெரயில் நிலையத்தில் உள்ள மேற்கூரை ஒரு பகுதியில் நின்று விடுகிறது. இதனால் ரெயிலில் செல்ல உள்ள பொதுமக்கள் மேற்கூரை இல்லாத இடத்தில் நிற்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே ரெயில்கள் நிற்கும் அளவிற்கு நடை மேடையில் மேற்கூரையை விரிவுபடுத்த வேண்டும். தற்பொழுது காரைக்குடியில் இருந்து மானாமதுரை வரை உள்ள பகுதியை மின்சார ரெயில் பாதையாக மாற்றியுள்ளனர். இதனால் ரெயில்களை மிக வேகமாக இயக்க முடியும். எனவே தினசரி காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் கம்பன் விரைவு ரெயில் மானாமதுரையில் இருந்து செல்லும் வகையில் நீட்டித்து தர வேண்டும்.

சென்னையில் இருந்து மதுரை வழியாக ராமேசுவரத்திற்கு செல்லும் ரெயில் பாதை அதிக போக்குவரத்து உள்ளதாக இருப்பதால் தற்பொழுது வட மாநிலங்களான வாரணாசி, அஜ்மீர், மற்றும் வேளாங்கண்ணி, கோவை போன்ற இடங்களில் இருந்து வாராந்திர ரெயில்கள் சிவகங்கை வழியாக இயக்கப்படுகின்றன. இவ்வாறு செல்லும் சிறப்பு ரெயில்களில் ஒரு சில ரெயில்கள் மட்டுமே சிவகங்கை ரெயில் நிலையத்தில் நின்று செல்கிறது. எனவே அனைத்து ரெயில்களும் சிவகங்கை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சிவகங்கை வர்த்தக சங்கத்தின் சார்பில் ஏற்கனவே பலமுறை தென்னக ரெயில்வே நிர்வாகத்திற்கும் மற்றும் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மக்களின் தேவை, வளர்ந்து வரும் நகரின் வளர்ச்சி போன்றவைகளை கருத்தில் கொண்டு சிவகங்கை ரெயில் நிலையத்திற்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னைக்கு பகல் நேர ரெயில்

சிவகங்கையை சேர்ந்த தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன்(ஓய்வு):-

சிவகங்கை பகுதியைச் சேர்ந்த ஏராளமானவர்கள் வேலை தேடி சென்னைக்கு சென்று வசிக்கின்றனர். இதனால் இவர்களை சந்திக்கச் செல்லும் உறவினர்கள் மற்றும் மாநில தலைநகரமாக இருப்பதால் அரசு பணியாக சென்னை செல்லும் அரசு அலுவலர்கள், வியாபாரிகள் மற்றும் தற்பொழுது கல்லூரி மாணவர்கள் சேர்க்கை காலமாக இருப்பதால் கவுன்சிலிங் செல்லும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என சென்னையை நோக்கி செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் அனைத்து ரெயில்களும் சிவகங்கையில் நின்று செல்ல வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. மேலும் பயணிகளுக்கு தேவையான டிக்கெட் முன்பதிவு மையம், தங்கும் அறை வசதி என கூடுதல் வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

அத்துடன் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மானாமதுரை வரை நீடிப்பதுடன் நீண்ட கால கோரிக்கையாக உள்ள ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு சிவகங்கை வழியாக பகல் நேர ெரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிறைவேற்றி தர வேண்டும்.


Next Story