நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா?


நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா?
x

வத்திராயிருப்பில் அறுவடைக்கு முன்பு நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பில் அறுவடைக்கு முன்பு நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல் சாகுபடி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வத்திராயிருப்பு, கான்சாபுரம், கூமாபட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி, இலந்தைகுளம், கோட்டையூர், சுந்தரபாண்டியம் ஆகிய பகுதிகளில் நெற்பயிர்களை அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

தற்போது இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் விளைந்து இன்னும் ஒரு மாதங்களில் அறுவடைக்கு தயாராக உள்ளது. வத்திராயிருப்பு பகுதியில் அறுவடை செய்யப்படும் நெற்பயிர்களை அரசு நெல் கொள்முதல்நிலையம் இல்லாததால் முதல் போக அறுவடையே இப்பகுதி விவசாயிகள் தொடங்குவதில் தயக்கம் காட்டும் சூழ்நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

கொள்முதல் நிலையம்

வத்திராயிருப்பில் அறுவடை செய்யப்படும் நெற்பயிர்களை பாதுகாப்பதற்கு நெற்களம் இல்லாததால் அறுவடை செய்யப்படும் நெற்பயிர்களை சாலைகளில் குவிக்கும் சூழ்நிலை நிலவுகிறது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நெல்லை உலர்த்த களம் இல்லை. மேலும் ெகாள்முதல் நிலையம் இல்லாததால் இப்பகுதி விவசாயிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தற்போது வத்திராயிருப்பு பகுதியில் அறுவடைக்கு நெற்பயிர்கள் தயார்நிலையில் உள்ளன.

இன்னும் ஒரு மாதத்தில் அறுவடை தொடங்க உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையத்தை அறுவடை தொடங்குவதற்கு முன்னரே இடத்தினை தேர்வு செய்து திறக்க வேண்டும். அதேபோல நெற்களமும் அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story