பழனி குளத்துரோடு-காரமடை இணைப்பு சாலை அமைக்கப்படுமா?


பழனி குளத்துரோடு-காரமடை இணைப்பு சாலை அமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் போக்குவரத்து நெரிசல் குறைய குளத்துரோடு-காரமடை இடையே இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

திண்டுக்கல்

வாகன பெருக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல்லுக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய நகராக பழனி உள்ளது. இங்கு உலக புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளதால் ஆண்டுக்கு சுமார் 1 கோடி பக்தர்கள் வருகின்றனர். அதோடு கோவை, ஈரோடு, கேரளாவில் இருந்து கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளும் பழனி வழியாகவே செல்கின்றனர். இதனால் பழனிக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகமாக வருகிறது.

வாகன பெருக்கத்தால் பழனி நகரில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டு வருகிறது. நெரிசலை குறைக்க போலீசார், நகராட்சி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதாவது சாலை விரிவாக்கம், சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம், ஒருவழிப்பாதை என பல்வேறு விதிகளை செயல்படுத்தி வருகின்றனர். ஆனாலும் பழனியில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.

போக்குவரத்து நெரிசல்

பழனி நகரை பொறுத்தவரை திண்டுக்கல் ரோடு, பெரியகடைவீதி, புதுதாராபுரம் ரோடு, உடுமலை ரோடு ஆகியவை முக்கிய சாலைகள். இதில் திண்டுக்கல் சாலையை தவிர்த்து பிற சாலைகளில்தான் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. ஏனெனில் இந்த சாலை பகுதியில் தான் மார்க்கெட், சப்-கலெக்டர் அலுவலகம், போலீஸ்நிலையம், தாலுகா அலுவலகம் என பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளது. இதனால் காலை, மாலை நேரங்களில் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

காரணம் சாலை குறுகியதாக மட்டுமின்றி பழனி அடிவாரத்தில் இருந்து பொள்ளாச்சி, ஈரோடு, தாராபுரம் செல்லும் வாகனங்களுக்கு இணைப்பு சாலை இல்லை என்பது தான். அதாவது பழனிக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இதில் பொள்ளாச்சி, தாராபுரம், ஈரோடு பகுதிகளில் வருபவர்கள் காந்தி மார்க்கெட் ரோடு, பெரியகடை வீதி, புதுதாராபுரம் சாலையை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் காவடி எடுத்து, அலகு குத்தி பக்தர்கள் வந்தால் அவ்வளவு தான் சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்.

இணைப்பு சாலை

எனவே பழனி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நகர் பகுதியில் போதிய இணைப்பு சாலைகள் அமைக்க வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக பழனி குளத்து ரவுண்டானா பகுதியில் வையாபுரிக்குளத்தை ஒட்டி காரமடை பகுதிக்கு இணைப்பு சாலை அமைத்தால் நகரில் போக்குவரத்து நெரிசல் என்பது முற்றிலும் குறையும். இந்த திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையாகும். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

கந்தசாமி (நகராட்சி துணைத்தலைவர்):- பழனி குளத்துரவுண்டானாவில் இருந்து படிப்பாறை காளியம்மன் கோவில் வரை வையாபுரிக்குள வடக்கு கரையில் இருந்த பாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் சில நாட்களுக்கு முன்பு அந்த பாதை அடைக்கப்பட்டது. இதனால் மார்க்கெட் பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து குளத்துரவுண்டானா-படிப்பாறை காளியம்மன் கோவில் வரை சாலை அமைக்க நகராட்சி பரிந்துரை செய்தது. அதோடு இந்த சாலை காரமடை வரை நீட்டிக்கப்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் தைப்பூச திருவிழா காலங்களில் உடுமலை, தாராபுரம் வழியே வரும் பக்தர்கள் பெரியகடைவீதி, மார்க்கெட் ரோடு, புதுதாராபுரம் சாலையை தான் பயன்படுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. எனவே குளத்துரோடு-காரமடை இணைப்பு சாலை அமைந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்.

நடைபாதை

ஸ்ரீதர் (வியாபாரி, பழனி):- பழனி பஸ்நிலையத்தில் இருந்து வையாபுரிக்குளம் வழியே திருஆவினன்குடி கோவில் வரை நடைபாதையுடன் சாலை உள்ளது. இந்த பாதை வழியே காலை, மாலையில் வையாபுரிக்குளத்தை ரசித்தபடி ஏராளமானோர் நடைபயிற்சி செல்கின்றனர். ஆனால் குளத்தின் வடக்கு கரை பகுதியில் குடியிருப்புகள் உள்ளது. எனவே குளத்து ரவுண்டானாவில் இருந்து வடக்கு கரை பகுதியையொட்டி நடைபாதையுடன் காரமடைக்கு இணைப்பு சாலை அமைத்தால் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு பொதுமக்களுக்கும் நடைபயிற்சிக்கு ஏதுவாக இருக்கும். மேலும் குளமும் அசுத்தமாவது தடுக்கப்படும்.


Next Story