பழனி சண்முக நதி புதுப்பொலிவு பெறுமா?
சண்முகநதியில் படித்துறை அமைப்பதுடன், நதியை தூய்மையாக வைக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மனித நாகரிகத்தின் முதல் பிறப்பிடமே ஆறு தான். ஆதிகாலத்தில் ஆற்றங்கரை பகுதியிலேயே மனிதன் தன் வாழ்க்கையை வளப்படுத்தி வாழ்ந்து வந்தான். இதை கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற ஆற்றங்கரை அகழாய்வு நமக்கு உணர்த்துகிறது. வாழ்வுக்கு ஆறு முக்கிய பங்காக உள்ளதால் மக்கள் அவற்றை வணங்கி வந்துள்ளனர். இந்து மதத்தில் ஆறு பெரும் புனிதமாக பார்க்கப்படுகிறது.
பழனி சண்முகநதி
கோவிலுக்கு செல்லும்போது மக்கள் அங்குள்ள நதிகளில் புனித நீராடுவது வழக்கம். நதியில் நீராடுவதால் பாவங்கள் நிவர்த்தியாகி புனிதம் அடைவதாக மக்கள் நம்புகின்றனர். அந்தவகையில் தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் குடிகொண்ட பழனியில் புண்ணிய நதியாக சண்முகநதி உள்ளது.
முருகனின் மற்றொரு பெயரான 'சண்முகர்' என்பதை முதன்மையாக கொண்டு இது அழைக்கப்படுகிறது. சண்முகம் என்றால் ஆறு என பொருள். பழனி மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகும் பாலாறு, பொருந்தலாறு, வரட்டாறு, சுருளியாறு, கல்லாறு, பச்சையாறு என 6 ஆறுகள் சங்கமித்து செல்வதால் இப்பெயர் பெற்றது.
புனித நீராடும் பக்தர்கள்
பழனியில் நடைபெறும் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா நாட்களில் வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், பழனி சண்முகநதியில் புனித நீராடிய பின்னரே பழனி கோவிலுக்கு செல்வது வழக்கம். அதேபோல் பன்னீர்காவடி, பால்காவடி, தீர்த்தகாவடி, பறவைக்காவடி எடுத்து வரும் பக்தர்களும் சண்முகநதியில் நீராடிய பின்புதான் பழனி முருகன் கோவிலை வந்தடைகின்றனர்.
இதுதவிர தை, ஆடி அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஏராளமான மக்கள் முன்னோர்களுக்கு சண்முகநதியில் வைத்தே தர்ப்பணம் கொடுக்கின்றனர். மேலும் பழனி வட்டாரத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்களின்போது சண்முகநதியில் வந்து தீர்த்தம் எடுத்து செல்கின்றனர். இதனால் சண்முகநதி புண்ணிய நதியாகவும், குடிநீர், விவசாயத்துக்கு ஆதாரமான ஜீவநதியாவும் திகழ்கிறது.
அடிப்படை வசதி
இவ்வளவு சிறப்பு வாய்ந்த சண்முகநதியில் அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. குறிப்பாக படித்துறை வசதி இல்லாததால் அங்கு நீராடும் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆழமான பகுதிக்கு செல்வதால் விபத்தில் சிக்குகின்றனர். இதுஒருபுறம் நதி பகுதியில் போதிய கண்காணிப்பு இல்லாததால் மாசடைந்து வருகிறது.
அதாவது புனித நீராடிய பின்பு பக்தர்கள் தாங்கள் அணிந்த ஆடைகளை அங்கேயே போட்டு செல்வதால் குப்பைபோல் தேங்கி கிடக்கிறது. இதனால் நதி நீர் மாசடைவதுடன் அங்கு பாசிகள், ஆகாய தாமரை போன்றவை வளர வழிவகுக்கிறது. இதனால் நதியின் அழகு, பறிபோவதுடன், அதன் அழகிய நீரோட்ட பாதை குறுகி போகிறது. ஆகவே பழனி பகுதியின் புண்ணிய நதியான சண்முகநதியில் படித்துறை அமைப்பதுடன், நதியை தூய்மையாக வைக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். புதுப்பொலிவு பெறுமா? புண்ணிய நதி என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர். இதுகுறித்து பழனி பகுதி மக்கள் கூறியதாவது:-
படித்துறை
கணேசன் (அடிவாரம், பழனி) : பழனிக்கு வரும் பக்தர்கள் சண்முகநதியில் நீராடிவிட்டுதான் முருகன் கோவிலுக்கு செல்கின்றனர். பழனி கோவில் திருவிழாக்களின் போது சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி சண்முகநதியில் நடைபெறுகிறது. நதியை தூய்மையாக வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சிவக்குமார் (பழனி) : வெளிநாடுகளில் நதி என்பது தண்ணீர் செல்லும் இடம். நம் நாட்டில் நதி என்பது புனிதம். பழனி சண்முகநதி மாசடைவதை தடுக்க அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அசுத்தமாவதை தடுக்க கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும். நதியின் நீர்வழி பாதையை அவ்வப்போது தூய்மைப்படுத்த வேண்டும். கரையோரம் தேவையின்றி உள்ள கட்டிடங்களை அப்புறப்படுத்தி பக்தர்களுக்கான வசதிகளை செய்ய வேண்டும்.