பாவூர்சத்திரம்-கடையத்தில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்லுமா?பயணிகள் எதிர்பார்ப்பு


பாவூர்சத்திரம்-கடையத்தில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்லுமா?பயணிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 2 Jan 2023 12:15 AM IST (Updated: 2 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மதுரை ரெயில்வே கோட்டம் முன்மொழிந்துள்ளபடி பாவூர்சத்திரம் மற்றும் கடையத்தில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்லுமா? என பயணிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தென்காசி

மதுரை ரெயில்வே கோட்டம் முன்மொழிந்துள்ளபடி பாவூர்சத்திரம் மற்றும் கடையத்தில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்லுமா? என பயணிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

பாலருவி எக்ஸ்பிரஸ்

119 ஆண்டுகள் பழமைவாய்ந்த நெல்லை - தென்காசி ரெயில் வழித்தடத்தில் நெல்லை டவுன், பேட்டை, காருக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, கீழ ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, ரவணசமுத்திரம், மேட்டூர், கீழப்புலியூர் ஆகிய `ஹால்ட்' ரெயில் நிலையங்களும், சேரன்மாதேவி, அம்பை, கடையம், பாவூர்சத்திரம் ஆகிய `கிராசிங்' ெரயில் நிலையங்களும் உள்ளன.

நெல்லையில் இருந்து அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, கொல்லம் வழியாக கேரள மாநிலம் பாலக்காடுக்கு (வண்டி எண் 16791/16792) பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

நிற்காமல் செல்லும் ரெயில்

இந்த ரெயில் கொரோனா ஊரடங்கிற்கு முன் கடையம் மற்றும் பாவூர்சத்திரம் ரெயில் நிலையங்களில் இரு மார்க்கங்களிலும் நின்று சென்றது.

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் தற்போது பாலக்காடு செல்லும்போது பாவூர்சத்திரத்திலும், பாலக்காட்டில் இருந்து நெல்லைக்கு வரும் போது கடையத்திலும் நிற்காமல் செல்கிறது.

இந்த ரெயில் மூலம் தமிழகத்தில் இருந்து வணிக ரீதியாக கடையம், பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதி பொதுமக்களும், வியாபாரிகளும் கேரளாவில் உள்ள புனலூர், கொட்டாரக்கரை, கொல்லம், கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் சென்று வருகிறார்கள்.

மதுரை கோட்டம் பரிந்துரை

வர்த்தக ரீதியாக லாபம் தரும் ரெயில் நிலையங்களாக கணக்கிடப்பட்ட கடையம், பாவூர்சத்திரம் ரெயில் நிலையங்களுக்கு மீண்டும் நிறுத்தம் வழங்க வேண்டும் என்று மதுரை ரெயில்வே கோட்ட மூத்த வர்த்தக மேலாளர் சார்பில் தெற்கு ரெயில்வே தலைமை வர்த்தக மேலாளருக்கும், தலைமை பயணிகள் போக்குவரத்து மேலாளருக்கும் பரிந்துரை கடிதம் எழுதப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

மேலும் கொரோனாவுக்கு முன்பு கடையம் மற்றும் பாவூர்சத்திரம் ரெயில் நிலையங்களில் பாலருவி எக்ஸ்பிரஸ் நின்று சென்றபோது, கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2020-ம் ஆண்டு மார்ச் வரை 6 மாத கால கட்டங்களில், ரூ.23.4 லட்சம் வருமானத்துடன் 2.34 லட்சம் பயணிகளை பாவூர்சத்திரம் ரெயில் நிலையமும், ரூ.15.7 லட்சம் வருமானத்துடன் 1.31 லட்சம் பயணிகளை கடையம் ரெயில் நிலையமும் கையாண்டுள்ளது.

பயணிகள் எதிர்பார்ப்பு

நெல்லை-தென்காசி வழித்தடத்தில் இயங்கும் ஒரே தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இதுவாகும். அதுவும் முக்கிய ெரயில் நிலையங்களான கடையம், பாவூர்சத்திரம் என 2 ரெயில் நிலையங்களில் நிற்காமல் செல்வதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே இந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் பாவூர்சத்திரம், கடையம் ரெயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுபற்றி பயணிகள் கருத்து தெரிவித்தனர்.

வியாபாரி

பாவூர்சத்திரம் செல்வ விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் சமுத்திரபாண்டி:-

நான் 20 வயது முதல் கேரளாவில் காய்கறிகள் மற்றும் பாத்திரம் வியாபாரம் செய்து வந்தேன். அப்பொழுது பாவூர்சத்திரம் பகுதிகளில் இருந்து காய்கறிகள் மற்றும் பாத்திரங்களை வாங்கி, நெல்லை - கொல்லம் பாசஞ்சர் ெரயிலில் பாவூர்சத்திரம் ெரயில் நிலையத்தில் ஏற்றிச் செல்வேன்.

அங்குள்ள பகுதிகளுக்கு சைக்கிளில் இந்தப் பொருட்களை கொண்டு சென்று வியாபாரம் செய்து வந்தேன்.

லாரி டிரைவர்கள்

தற்போது பல ஆண்டுகளாக கேரள மாநிலம் கொச்சியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறேன். அங்கு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையில் 4800-க்கும் மேற்பட்ட லாரிகள் கியாஸ், பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களை ஏற்றி செல்கிறது. இந்த லாரிகள் தமிழ்நாட்டில் உள்ள லாரிகள் ஆகும். இவற்றிற்கு டிரைவர்கள் தமிழ்நாட்டில் தென்காசி, நாமக்கல், மதுரை மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் சென்று வேலை பார்க்கின்றனர். நான் அங்குள்ள லாரி டிரைவர்கள் சங்கத்திற்கு தலைவராக இருந்து வருகிறேன்.

கொரோனா காலத்திற்கு முன்பு வரை நெல்லையில் இருந்து பாலக்காடு செல்லும் பாலருவி ெரயில், பாவூர்சத்திரம் ெரயில் நிலையத்தில் நின்று சென்று வந்ததால், என்னைப் போன்ற டிரைவர்கள் மட்டுமல்லாது வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் பாவூர்சத்திரம், ஆவுடையானூர், அரியப்பபுரம், சுரண்டை, ஆலங்குளம், சாம்பவர் வடகரை, சேர்ந்தமரம், அடைக்கலபட்டணம், பூலாங்குளம், பெத்தநாடார்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கேரளா சென்றுவர மிகவும் வசதியாக இருந்தது.

மிகவும் சிரமம்

தற்போது இந்த ெரயில் பாவூர்சத்திரத்தில் நிற்காமல் செல்வதால் இரவு 11 மணி அளவில் தென்காசிக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. அந்த சமயங்களில் அந்த ஊர்களில் இருந்து பஸ் வசதிகள் ஏதும் கிடையாது, இதனால் நாங்கள் எங்கள் பகுதிகளில் இருந்து 350 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையில் ஆட்டோவில் கட்டணம் செலுத்தி தென்காசி ெரயில் நிலையம் சென்று இந்த ெரயிலில் செல்லும் நிலை உள்ளது. இது மிகவும் சிரமமாக உள்ளது.

அத்துடன் பலர் கேரளாவில் உள்ள உறவினர்களை பார்க்கச் செல்ல வேண்டுமானால், ஆட்டோக்களில் தென்காசி சென்று ெரயில் ஏற வேண்டியது இருப்பதால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பாலருவி ெரயில் பாவூர்சத்திரம் ெரயில் நிறுத்தத்தில் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,

எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள்

மதுரை ரெயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜன்:-

பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கீழக்கடையம் மற்றும் பாவூர்சத்திரம் ரெயில் நிறுத்தங்கள் வழங்க வேண்டும் என்று மதுரை ெரயில்வே கோட்டம், தெற்கு ெரயில்வேக்கு முன்மொழிந்துள்ளது. உடனடியாக நெல்லை, தென்காசி மாவட்டங்களை சார்ந்த எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்துக்கு சென்று உடனடியாக இந்த ரெயில் நிறுத்த முன்மொழிவை ரெயில்வே வாரியத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தெற்கு ரெயில்வே, ரெயில்வே வாரியத்துக்கு கடிதம் எழுதினால் ஒரு மாதங்களுக்குள் ரெயில் நிறுத்தங்கள் கிடைத்து விடும்.

லாபம் குறைந்தது

அரியப்பபுரம் மேலலட்சுமிப்பட்டியை சேர்ந்த முருகன்:-

நான் கடந்த 20 ஆண்டுகளாக கேரளாவில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறேன். முன்பு பாவூர்சத்திரத்தில் இருந்து இந்த ரெயில் மூலம் ஜவுளிகளை ஏற்றிச்சென்று வியாபாரம் செய்தேன். தற்போது இந்த ரெயில் பாவூர்சத்திரத்தில் நிற்காததால் அட்டைபெட்டிகள், மூட்டைகளை தென்காசிக்கு கொண்டு சென்று ரெயில் ஏற வேண்டி உள்ளது. இதனால் கூடுதல் செலவாகிறது. லாபமும் குறைந்து விட்டது. எனவே முன்பு போலவே பாவூர்சத்திரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.


Next Story