வடபாதிமங்கலம் அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் மீண்டும் கட்டப்படுமா?
`கஜா' புயலின்போது இடிந்து விழுந்த வடபாதிமங்கலம் அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் மீண்டும் கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கூத்தாநல்லூர்:
`கஜா' புயலின்போது இடிந்து விழுந்த வடபாதிமங்கலம் அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் மீண்டும் கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரசு உயர்நிலைப்பள்ளி
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இதே பள்ளி வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையமும் செயல்படுகிறது.இங்கு வடபாதிமங்கலம், புனவாசல், கிளியனூர், சோலாட்சி, மாயனூர், பூசங்குடி, உச்சுவாடி, மாதாகோவில், கோம்பூர், எள்ளுக்கொல்லை காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
சுற்றுச்சுவர் இடிந்தது
இந்த பள்ளி, சாலையையொட்டி அமைந்துள்ளதால் மாணவர்கள் கவனம் சிதறாவண்ணம் கல்வி பயிலுவதற்கும், அங்கன்வாடி குழந்தைகள் விளையாட்டு நேரத்தில் சாலைக்கு சென்று விடாமல் பாதுகாக்கவும் மற்றும் பள்ளியின் பாதுகாப்பு கருதியும் பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.இந்தநிலையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வீசிய கஜா புயலின் போது மரங்கள் சாய்ந்து சுற்றுச்சுவர் மீது விழுந்தன. இதில் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. ஆனால், ஆண்டுகள் பல கடந்தும் சேதமடைந்த சுற்றுச்சுவர் இன்றுவரை மீண்டும் கட்டப்படவில்லை.
பொதுமக்கள் எதிர்பார்ப்பு
இதனால், மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் பள்ளியின் வளாகத்திற்குள் கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. அவை பள்ளி வளாகத்திற்குள் அசுத்தம் செய்கின்றன.ஆகவே, இடிந்து விழுந்த பள்ளியின் சுற்றுச்சுவரை மீண்டும் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.