கடலூர் பாதிரிக்குப்பத்தில் ஆகாய தாமரை நிறைந்து காணப்படும் குளம் தூர்வாரப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கடலூர் பாதிரிக்குப்பத்தில் ஆகாய தாமரை நிறைந்து காணப்படும் குளம் தூர்வாரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடலூர் பாதிரிக்குப்பம் - திருவந்திபுரம் சாலையோரம் ஊராட்சிக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளம் ஆகாய தாமரை நிறைந்து காணப்படுகிறது. இது தவிர அந்த குளத்தில் தான் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அப்பகுதி வீடுகளில் உள்ள கழிவுநீரும் இந்த குளத்தில் தான் கலக்கிறது. புதர் மண்டி கிடக்கும் இந்த குளத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புகளும் அதிகமாக உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை.
இந்த குளத்தை தூர்வாரி சுத்தம் செய்தால், பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். கரையோரம் நடைபாதை அமைத்து, சிறிய விளையாட்டு பூங்கா அமைக்கவும் ஊராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். நடைபாதை அமைத்தால், அப்பகுதி மக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி செல்ல ஏதுவாக இருக்கும். இது தவிர அங்கு குழந்தைகளை கவரும் வகையில் நீரூற்றுகளும் அமைக்க ஏற்பாடு செய்யலாம்.
தூர்வார கோரிக்கை
தற்போது மழைக்காலம் தொடங்க இருக்கும் நிலையில், அனைத்து நீர் நிலைகளையும் தூர்வார வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் இந்த குளத்தில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்றி, ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி இதை மாவட்ட கலெக்டர் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.