சாலையின் நடுவே அபாய பள்ளம் சீரமைக்கப்படுமா?
கும்பகோணத்தில் சாலையின் நடுவே அபாய பள்ளம் சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் சாலையின் நடுவே அபாய பள்ளம் சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
சிமெண்டு சாலை
கும்பகோணம் பேட்டை வடக்கு தெரு ஆலையடி ரோடு பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகளின் போது சாலை நடுவே பள்ளம் தோண்டப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக இந்த சாலை முழுவதும் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சியளித்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் புதிதாக கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.
அபாய பள்ளம்
தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கான்கிரீட் சாலையின் நடுவே பாதாள சாக்கடை ஆள் நுழைவுக் குழி அமைந்துள்ள இடத்தில் 2 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலை நடுவே பள்ளம் இருப்பதே தெரியாத நிலையில் இருப்பதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பள்ளி மாணவ, மாணவிகளும் முதியவர்களும் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் சாலை நடுவில் பள்ளம் இருப்பது தெரியாமல் பெரும் விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு சாலையின் நடுவே உள்ள அபாய பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.