ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் புதுப்பிக்கப்படுமா?
கோத்தகிரி அருகே கூக்கல்தொரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து, மழைநீர் ஒழுகுகிறது. இந்த கட்டிடம் புதுப்பிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே கூக்கல்தொரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து, மழைநீர் ஒழுகுகிறது. இந்த கட்டிடம் புதுப்பிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
இடிந்து விழும் அபாயம்
கோத்தகிரி அருகே கூக்கல்தொரை கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பிறப்பு, இறப்பு பதிவாளர் அலுவலகம் ஒரே கட்டிட வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. கூக்கல்தொரை மற்றும் சுற்றுவட்டார குக்கிராமங்களை சேர்ந்த நோயாளிகள் தினமும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சுகாதார நிலையம் பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
மேலும் மேற்கூரையில் பெரும்பாலான பகுதிகளில் கான்கிரீட் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து உள்ளது. இதனால் மழை காலங்களில் மழைநீர் ஒழுகி வருகிறது. மேலும் அறைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
புதுப்பிக்க வேண்டும்
இதனால் நோயாளிகள் கூக்கல்தொரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும் டாக்டர், செவிலியர்கள் சிரமத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கூக்கல்தொரையில் ஆரம்ப சுகாதார நிலையம் பழுதடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. மழை பெய்யும் சமயங்களில் தண்ணீர் ஒழுகுவதோடு, உள்ளே தண்ணீர் தேங்கி நிற்பதால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். அங்கு போதுமான வசதிகள் இல்லை. கட்டிடத்தின் மேற்கூரையில் கான்கிரீட் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அங்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே செல்கிறது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன்பு பழுதடைந்த கட்டிடத்தை பராமரித்து புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.