அரசு ஆஸ்பத்திரிகளின் தரம் மேம்படுத்தப்படுமா?
அரசு ஆஸ்பத்திரிகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மக்களின் நலனை கருத்தில் கொண்டும், எளிதில் அனைவரும் இலவசமாக சிகிச்சை பெற வேண்டும் என்ற நோக்கத்திலும் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆஸ்பத்திரி, மருத்துவக்கல்லூரி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலான மக்கள் தங்களது ஏதேனும் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் முதலில் செல்வது அரசு மருத்துவமனைக்கு தான்.
பணியாளர்கள் பற்றாக்குறை
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் சேவை குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
சேத்தூரை சேர்ந்த காதர் மைதீன்:- சேத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் 70 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இங்கு எண்ணற்ற பேர் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் தடையின்றி வழங்க போதிய செவிலியர்கள் இல்லை. டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. மேலும் மருந்து சீட்டு பதிவு செய்யவும், மாத்திரைகள் வழங்கவும் போதிய பணியாளர்கள் இல்லை. ஆதலால் அனைத்து மாத்திரைகளும் தட்டுப்பாடின்றி வழங்கவும், போதுமான பணியாளர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிர்காக்கும் மருந்து
திருச்சுழி அருகே ராமசாமிபட்டியை சேர்ந்த விவசாயி அலகுபாண்டி கூறுகையில், திருச்சுழி அரசு மருத்துமனையில் உயிர்காக்கும் மருந்துகள், வைட்டமின் மாத்திரைகள் உள்பட பல்வேறு நோய்களுக்கு போதுமான அளவு மாத்திரைகள் கிடைப்பதில்லை. எனவே தடையின்றி அனைத்து மருந்து, மாத்திரைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அரசு ஆஸ்பத்திரியின் தரத்தை உயர்த்த வேண்டும்.
அடிப்படை தேவை
காரியாபட்டி பாமா:- காரியாபட்டி வட்டாரத்தில் எண்ணற்ற கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் காரியாபட்டி அரசு மருத்துவமனையை நாடுகின்றனர். ஆனால் அரசு மருத்துவமனையில் எந்தவித மருத்துவ வசதிகளும் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மருந்து, மாத்திரைகளும் பற்றாக்குறையாக உள்ளது. அடிப்படை தேவைகள் கூட இந்த மருத்துவமனையில் இல்லை.
மனநிம்மதி
மம்சாபுரத்தை சேர்ந்த முனீஸ்வரி கூறுகையில்,
எனது மகனுக்கு உடல்நிலை சரியாத இல்லாததால் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்தேன். சிகிச்சை நன்றாக இருந்தது. மன நிம்மதியுடன் இங்கிருந்து செல்கிறேன்.
மம்சாபுரம் கருப்பசாமி,
மம்சாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையான அளவு உயிர் காக்கும் மருந்துகள் இல்லை. எனவே தேவையான அளவு உயிர்காக்கும் மருந்துகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு மருந்து இல்லாததால் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இங்கு உள்நோயாளிகளுக்கு படுக்கை வசதியை அதிகப்படுத்த வேண்டும்.