சிட்கோ தொழிற்பேட்டைக்கு செல்லும் சாலை அகலப்படுத்தப்படுமா?


சிட்கோ தொழிற்பேட்டைக்கு செல்லும் சாலை அகலப்படுத்தப்படுமா?
x

சிட்கோ தொழிற்பேட்டைக்கு செல்லும் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று தொழில்முனைவோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பெரம்பலூர்

தார் சாலை

பெரம்பலூரை அடுத்த எளம்பலூரில் பிரம்மரிஷி மலையின் வடக்குப்பகுதியில் சுமார் 44 எக்டேர் பரப்பளவில் சிட்கோ தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு கிளஸ்டர் தொழில்கூட்டமைப்பு மற்றும் வேளாண் கருவிகள், உற்பத்தி சார்ந்த தொழில்கள், குடம் தயாரித்தல், பிளை ஆஷ் செங்கல் தயாரிப்பு, பருத்தி, வெங்காயம், மக்காச்சோளம் போன்ற வேளாண்மை சார்ந்த தொழிற்கூடங்கள், எண்ணெய் செக்கு ஆலை, ரெடிமேடு ஜன்னல், பேப்ரிகேசன், நொறுக்கு தீனிகள் மற்றும் உணவுத்தொழில் கூடங்கள் உள்ளிட்ட தொழிற்கூடங்கள் இயங்கி வருகின்றன.

இந்த தொழிற்பேட்டையில் இருந்து உற்பத்தி பொருட்களை வெளியே கொண்டு செல்வதற்காக ஊரக வளர்ச்சித்துறை மூலம் அமைக்கப்பட்ட தார் சாலை குறுகலாக ஒற்றை சாலையாக உள்ளது. மேலும் சிட்கோ தொழில்பேட்டையையொட்டி தனியார் கல்லூரியின் தொழில்நுட்ப வளாகம், பாராமெடிக்கல் கல்லூரி ஆகியவையும், எம்.ஜி.ஆர். நகர் குடியிருப்பு பகுதியும் உள்ளன.

பஸ்கள் இயக்கம்

பெரம்பலூரில் இருந்து சிட்கோ, எம்.ஜி.ஆர்.நகர் வழியாக பிரம்மதேசம் வரை மினி பஸ்கள் தினமும் 8-க்கும் மேற்பட்ட முறைகள், அந்த சாலை வழியாக சென்று வருகின்றன. இதைத்தவிர வார நாட்களில் தொழில்நுட்ப வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல், பாராமெடிக்கல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் 20-க்கும் மேற்பட்ட கல்லூரி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொழிற்பேட்டையை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

கடினமாக உள்ளது

சிட்கோ உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேஷ்:- எளம்பலூர் புறவழிச்சாலையில் இருந்து இந்திரா நகரில் உள்ள திருச்சி-சென்னை நான்குவழிச்சாலைக்கு செல்லும் அணுகு சாலையில் இருந்து தொழிற்பேட்டைக்கு பிரிந்து செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளதால், இலகுரக, கனரக வாகனங்கள் இருதிசைகளில் இருந்தும் ஒன்றையொன்று கடந்து செல்ல முடிவதில்லை. தொழிற்பேட்டைக்கு மூலப்பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களும், தொழிற்பேட்டையில் இருந்து உற்பத்தி பொருட்களை வெளிச்சந்தைக்கு எடுத்து செல்லும் கனரக வாகனங்களும் குறுகிய சாலை வழியாக சென்று வருவது கடினமாக உள்ளது. ஆகவே உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு, சிட்கோ தொழிற்பேட்டைக்கு செல்லும் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்த வேண்டும்.

விபத்துகள் ஏற்படுகின்றன

தொழில் முனைவோரும், தன்னார்வலருமான அரிமா கோபிநாத்:- தற்போது உள்ள ரோவர் கல்வி நிறுவனங்கள்- சிட்கோ தொழிற்பேட்டையை சென்றடையும் சாலை 3.5 மீட்டர் என குறுகிய அகலத்திற்கு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அணுகு சாலையில் இருந்து தொழிற்பேட்டையை இணைக்கும் சாலையின் முகப்பில் விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். மேலும் அடிக்கடி அப்பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனை தவிர்ப்பதற்காகவும், வாகனங்கள் மோதிவிடாமல் சீராக செல்வதற்கு வசதியாகவும் தற்போதுள்ள 3.5 மீட்டர் தார் சாலையை அகலப்படுத்தி, 5.5 மீட்டர் தார் சாலையாக விரிவுபடுத்தி தர மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்திட முன்வர வேண்டும்.

அகலப்படுத்த வேண்டும்

எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கேண்டீன் உரிமையாளரான இளங்கோவன்:- தொழிற்பேட்டையை கடந்து பொறியியல் கல்லூரி வளாகத்திற்கும், பிரம்மதேசத்திற்கும் செல்லும் பிரதான சாலையை கல்லூரி மாணவ-மாணவிகளின் நலன் கருதி சாலையின் இருபுறமும் அகலப்படுத்த வேண்டும். எம்.ஜி.ஆர். நகரில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல சிட்கோ தொழிற்பேட்டையை வந்தடையும் சாலையை இருபுறமும் போர்க்கால அடிப்படையில் அகலப்படுத்தி, இருபுறமும் வாகனங்கள் தடையின்றி வந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

பங்களிப்பு தொகை...

தொழில் முனைவோர் சொல்லின்செல்வன்:- சிட்கோ தொழிற்பேட்டைக்கு செல்லும் பிரதான சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தி தருமாறு தொழிற்பேட்டையில் உள்ள உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு ஏற்கனவே மனு கொடுத்திருந்தோம். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சாலை மேம்பாட்டு பணியை மேற்கொள்ள இயலும் என்று அறிவுறுத்தப்பட்டதால், அதற்காக பொதுமக்களின் சார்பில் 33 சதவீத பங்களிப்பு தொகையான சுமார் ரூ.12 லட்சம் ஊரக வளர்ச்சித்துறைக்கு செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 67 சதவீதத்தை அரசு உடனே அனுமதித்து வழங்கினால், எம்.ஜி.ஆர். நகர் பொதுமக்களும், பொறியியல் பயிலும் கல்லூரி மாணவ-மாணவிகளும், தொழிற்பேட்டையை சேர்ந்த தொழில்முனைவோர்களும் நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் சாலை விரிவாக்க பணியை சுமார் 400 மீட்டர் நீளத்திற்கு போர்க்கால அடிப்படையில் உடனடியாக மேற்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story