பாதை பிரச்சினையை தீர்த்து சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?


திருவாரூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் செல்லும் பாதை பிரச்சினையை தீர்த்து சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

திருவாரூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் செல்லும் பாதை பிரச்சினையை தீர்த்து சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

ஒழுங்குமுறை விற்பனை கூடம்

திருவாரூர் ரெயில்வே மேம்பாலம் அருகில் நாகை புறவழிச் சாலை பகுதியில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம் அமைந்துள்ளது. இங்கு வேளாண் விற்பனைக்குழு அலுவலகம், வேளாண்மை துணை இயக்குனர் அலுவலகம், உதவி இயக்குனர் மண் ஆய்வு அலுவலகம், உதவி இயக்குனர் நீர் ஆய்வு அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளன.

இதில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் உளுந்து, பச்சை பயிறு, பருத்தி போன்ற விளைபொருட்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

பொருளீட்டு கடன்

மேலும் வேளாண் விளைபொருட்களுக்கு பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது. இங்கு பருத்தி கொள்முதல் என்பது முக்கியமானதாக இருந்து வருகிறது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பில் பருத்தி விற்பனை நடைபெறுவது வழக்கம்.இதனால் இந்த பகுதியில் வேன், டிராக்டர், லாரி என வாகன போக்குவரத்து அதிகமாக இருந்து வருகிறது.

நாகை புறவழிச்சாலையில் இருந்து ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்திற்கு செல்வதற்கு இணைப்பு சாலை அமைந்துள்ளது. இந்த சாலை அரசுக்கு சொந்தமான சாலையாக இல்லாத நிலையில், சேதமடைந்து காணப்படுகிறது.

சேதமடைந்த சாலை

சேதமடைந்த சாலையில் கம்பிகள் முற்றிலும் பெயர்ந்து மண் சாலையாக காட்சியளிக்கிறது. சாலையில் சாக்கடைநீர் வழிந்து ஓடும் அவல நிலை நிலவி வருகிறது. இந்த சாலை ஒரு மடத்திற்கு சொந்தமான சாலை என்றும், இந்த சாலை ஒரு காலத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாகை நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையமாக இருந்த போது அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சாலை மடத்திற்கு சொந்தமான நிலையில், இந்த சாலை இதுவரை சீரமைக்கப்படாமல் இருந்து வருகிறது. ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ள நிலையில் யாரும் இந்த சாலையை பற்றி கவலை கொள்ளப்படவில்லை என்பது வேதனைக்குரியது.

சீரமைக்க வேண்டும்

இந்த பாதை பிரச்சினைக்கு தீர்வுக்கான சாலையை உடனடியாக அரசு கையப்படுத்தி புதிதாக சாலையை சீரமைத்துதர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திருவாரூர் அருகே காணூரை சேர்ந்த அழகர்ராஜா:-

திருவாரூர் ஒழங்குமுறை விற்பனை கூடத்தில் அதிகமாக பருத்தி தான் விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 3 மாதங்கள் கொள்முதல் என்பது நடைபெறும், மேலும் விளைபொருட்கள் பொருளீட்டு கடன் பெறப்பட்டு வருகிறது. இதனால் அதிகமாக வாகன போக்குவரத்து செல்கின்ற பகுதியாக இருந்து வருகிறது.

வேகத்தடை

குறிப்பாக நாகை புறவழிச்சாலையில் இருந்து ஒழுங்குமுறை விற்பனை கூட இணைப்பு சாலை பிரியும் இடத்தில் எந்தவித வேகத்தடை இல்லாமல் உள்ளது.

இதன் காரணமாக விளைபொருட்களை ஏற்றி கொண்டு வரும் வாகனங்கள் நாகை பைபாஸ் சாலையில் இருந்து ஒழுங்குமுறை விற்பனை கூட இணைப்பு சாலையில் திரும்பும்போது, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து வாகனங்கள் புறவழிச்சாலையில் ஏறும் போது ஆபத்தான நிலை இருந்து வருகிறது.

பாதை பிரச்சினை

இந்த இணைப்பு சாலை அரசுக்கு சொந்தமான சாலையாக இல்லாமல் உள்ளதால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாமல் இருந்து வருகிறது.எனவே தமிழக அரசு, திருவாரூர் ஒழங்குமுறை விற்பனை கூடம் செல்லும் வழி பாதை பிரச்சினையை கலைந்து, உரிய நிலத்தை கையப்படுத்தி உடனியாக பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும். மேலும் நாகை புறவழிச்சாலையில் இருந்து ஒழுங்குமுறை விற்பனை கூடம் செல்லும் இடத்தில் விபத்தினை தடுக்கும் வகையில் உடன் வேகத்தடை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story