விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்கப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடியில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடியில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
வேளுக்குடி கிராமம்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே, திருவாரூர்-மன்னார்குடி வழித்தடத்தில் வேளுக்குடி கிராமம் உள்ளது. இந்த பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் மற்றும் வழிபாட்டு தலங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சாலையை அப்பகுதி மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இந்த சாலை உள்ளது. தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள், கனரக வாகனங்கள் என தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும் சென்னை சென்று வரக்கூடிய பஸ்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன.
வேகத்தடை
வேளுக்குடி பாலம் அருகே சாலையோரத்தில் புளியமரம் உள்ள பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் குறிப்பிட்ட இடத்தில் 10 க்கும் மேற்பட்ட வாகன விபத்துகள் நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே வேளுக்குடியில் புளியமரம் உள்ள இடத்தில் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.