'ஏழைகளின் ஊட்டி' ஏலகிரி மலையில் கோடைவிழா நடைபெறுமா?
‘ஏழைகளின் ஊட்டி’ என்று அழைக்கப்படும் ஏலகிரிமலை கோடைவிழா கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு நடைபெறவில்லை. எனவே இந்த ஆண்டாவது கோடை விழா நடைபெறுமா? எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
'ஏழைகளின் ஊட்டி' என்று அழைக்கப்படும் ஏலகிரிமலை கோடைவிழா கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு நடைபெறவில்லை. எனவே இந்்த ஆண்டாவது கோடை விழா நடைபெறுமா? எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
30 சதுரகிலோ மீட்டர் பரப்பளவு
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஏலகிரிமலை 'ஏழைகளின் ஊட்டி' என்று அழைக்கப்படுகிறது. ஏலகிரிமலை கடல் மட்டத்தில் இருந்து 1,200 மீட்டர் உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டு அமைதியான சூழலில் அமைந்துள்ளது. ஏலகிரியின் மொத்த பரப்பளவு 30 சதுர கிலோமீட்டர் ஆகும். திருப்பத்தூரில் இருந்து 30 கி.மீ. தூரத்திலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து 224 கி.மீ. தூரத்திலும், பெங்களூருவில் இருந்து 200 கி.மீ. தூரத்திலும் ஏலகிரி மலை அமைந்துள்ளது.
இங்கு இயற்கை பூங்கா, முருகன் கோவில், தொலைநோக்கி இல்லம், நிலாவூர் ஏரி மற்றும் பூங்கா, ஆஞ்சநேயர் கோவில், மங்கலம் தாமரைக்குளம், படகு குழாம் போன்ற இடங்கள் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த இடமாகும்.
ஊட்டி, கொடைக்கானல் போன்று சுற்றுலா தலமாக விளங்கும் ஏலகிரி மலைக்கு, பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுகளுக்கும் தமிழ் புலவர்கள் மற்றும் அரசர்களின் பெயர்களான திருவள்ளுவர், கம்பர், பாரதியார், அதியமான், அவ்வையார், பாரதிதாசன், பாரி உள்ளிட்ட 14 பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. ஏலகிரி மலையில் 14 சிறு கிராமங்கள் உள்ளன.
கர்மவினைகள் தீரும்
தற்போது ஏலகிரி மலையில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு காலடி வைத்தாலே கர்ம வினைகள் தீரக்கூடிய ஸ்ரீ ஸத்ய ஆஸ்ரமம் அமைந்துள்ளது. மாதந்தோறும் பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் மட்டுமே திறக்கப்படும் பூலோக புண்ணிய ஆஸ்ரமம் ஆகும். இது, 18 வருட காலமாக மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் ஏலகிரி மலை அடிப்பகுதி வட்டவடிவமாகவும், பக்கவாட்டில் செங்குத்தான பாறைகளையும் கொண்டு பார்ப்பதற்கு ஒரு பீடபூமி போல இம்மலை காட்சியளிக்கிறது. மலையின் வடக்கு மற்றும் வடகிழக்குச் சரிவுகளிலும், மலை உச்சியிலும் பசுமைமாறா மரங்கள் காணப்படுகின்றன. பொதுவாக இம்மலைப்பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியசும் பதிவாகிறது.
புங்கனூர் ஏரி
இங்குள்ள புங்கனூர் ஏரி ஒரு செயற்கை ஏரியாகும். நடுவில் ஒரு நீரூற்று உள்ளது. ஏலகிரியின் அழகை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும் உருவாக்கப்பட்டது. 56.70 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த ஏரி ஏலகிரி மலைகளின் மையத்தில் அமைந்துள்ளது. ஏரி மற்றும் படகு சவாரியானது ஏலகிரி மலை மேம்பாடு மற்றும் சுற்றுலா மேம்பாட்டு சங்கத்தால் பராமரிக்கப்படுகிறது.
இந்த ஏரியில் படகு மற்றும் படகோட்டுதல் வசதி உள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கு மலைகளின் அழகை ஒரு நிதானமான இடத்தில் இருந்து அனுபவிக்க உதவுகிறது. ஏரியின் அழகை மக்கள் அமர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு அழகான தோட்டம் உள்ளது. தோட்டத்தில் ஒரு நீரூற்று மற்றும் குழந்தைகள் பூங்கா நிறுவப்பட்டுள்ளன.
இயற்கையை ரசிக்கும் காதலர்கள்
இங்கு வரும் பல்வேறு வகையான பறவைகளை காண்பதற்கென்றே ஒரு திறந்தவெளி உள்ளது. இதனால், இந்த இடம் காதலர்களுக்கு உண்மையிலேயே இயற்கையை ரசிப்பதற்கு ஏற்ற இடம். தமிழகத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான முருகன் கோவில் திருவிழா மிகவும் கோலாகலமாகவும் மகிழ்ச்சியுடனும் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகின்றது.
இந்தக் கோவிலில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில், ஏராளமான திருவிழாக்கள் நடக்கிறது. குறிப்பாக, முருகனுக்கு ஆடி மாதத்தில் பக்தர்கள் பால் குடம் ஏந்தி மலையடிவாரத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரம் வரை காவடி எடுத்து வந்து தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.
ஏலகிரி மலையில் அதிகளவில் கேழ்வரகு, சோளம், கம்பு உள்ளிட்ட உணவு தானியங்கள் மற்றும் மா, பலா, வாழை விளைகின்றன.
கோடை விழா
ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோடைவிழா நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோடை விழா தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி வாரியத்தால் நடத்தப்படுகிறது. அப்போது பல்வேறு துறைகளை சேர்ந்த அரங்குகள், மலர் கண்காட்சி, படகு இல்லத்தில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள், பல்வேறு வகையான நாய்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் மாநிலம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மக்கள் கலந்து கொள்வார்கள்.
ஏலகிரி மலையில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கோடைவிழாவுக்கு பிறகு இதுவரை கோடைவிழா நடக்கவில்லை. இதனால் இந்த ஆண்டாவது கோடை விழா நடைபெறுமா? எனப் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த ஆண்டு கோடை விழா நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஆனால் கோடை விழா நடத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.