பாதியில் நிறுத்தப்பட்ட சமுதாயக்கூட பணிகள் மீண்டும் தொடங்குமா?
கோத்தகிரி அருகே பாதியில் நிறுத்தப்பட்ட சமுதாயக்கூட பணிகள் மீண்டும் தொடங்குமா? என கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே பாதியில் நிறுத்தப்பட்ட சமுதாயக்கூட பணிகள் மீண்டும் தொடங்குமா? என கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
சமுதாயக்கூடம்
கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்டது கேர்பெட்டா கிராமம். இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த மக்கள் தங்களது கிராமத்தில் பொதுநிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் நடத்துவதற்கு சமுதாயக்கூடம் இல்லாததால் சிரமப்பட்டு வந்தனர். மேலும் இதுதொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ.வுக்கு மனுக்கள் அளித்தனர். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சமுதாயக்கூடம் கட்டுவதற்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. பின்னர் 50 சதவீத பணிகள் நிறைவடைந்தன.
ஆனால், சில காரணங்களுக்காக கட்டுமான பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முழுமை பெறாத கட்டிடத்தை சுற்றிலும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது.
நடவடிக்கை வேண்டும்
இதனால் அப்பகுதி மக்கள் சமுதாயக்கூடம் இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறும்போது, கடந்த 3 ஆண்டுகளாக சமுதாய நலக்கூடம் கட்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.இதனால் அரசு நிதி மற்றும் மக்களின் வரிப்பணம் வீணாகும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பல முறை அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சமுதாய நலக்கூட பணிகளை மீண்டும் தொடங்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.