குடிநீருக்காக பயன்படுத்தப்படும் தாமரைக்குளம் ஊரணி சீரமைக்கப்படுமா?


குடிநீருக்காக பயன்படுத்தப்படும் தாமரைக்குளம் ஊரணி சீரமைக்கப்படுமா?
x

முக்கண்ணாமலைப்பட்டியில் உள்ள தாமரைக்குளம் ஊரணியில் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. கம்பிவேலி அமைத்து குடிநீருக்காக பயன்படுத்தப்படும் ஊரணி சீரமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

புதுக்கோட்டை

அன்னவாசல்:

தாமரைக்குளம் ஊரணி

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், முக்கண்ணாமலைப்பட்டியில் தாமரைக்குளம் ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் உள்ளூர் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மாதாகோவில், புலன்பட்டி, வேளாம்பட்டி, புதூர், மேட்டுப்பட்டி, பாறைப்பட்டி, வேளாங்குளம், வவ்வாநேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிக்கும் இந்த ஊரணியில் தண்ணீர் எடுத்து வருகின்றனர். இந்த ஊரணி அப்பகுதி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

தூர்வாரப்பட்டது

இந்த ஊரணியை சுற்றி மூன்று புறமும் மலைகளும் ஒரு புறம் சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளதால் வெளியே இருந்து இந்த ஊரணிக்கு தண்ணீர் வர இயலாது. மழை பெய்தால் மட்டுமே இந்த ஊரணி நிரம்பும். மலை மீது மேயும் கால்நடைகளான ஆடு, மாடு உள்ளிட்டவற்றின் சாணங்கள், குப்பைகள் அதிக அளவு இந்த குடிநீர் ஊரணிக்குள் கலக்கின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு உள்ளூர் இளைஞர்கள் சிலர் உதவியுடன் தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

கோரிக்கை

அதன்பின் மரம், செடிகள், குப்பைகள், ஆடு, மாடு கழிவுகள் போன்றவைகள் இந்த ஊரணியில் கலக்கின்றன. இதனால் தண்ணீர் மாசடைந்துள்ளது. இதனால் இந்த ஊரணி தண்ணீரை குடிநீராக பயன்படுத்த அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர். மேலும் மழை காலங்களில் தண்ணீர் அந்த ஊரணியில் விழும் பொழுது கழிவுகள் அதில் கலக்காமல் இருக்கவும், ஆடு, மாடுகள் உள்ளே சென்று அசுத்தம் செய்யாமல் இருக்கவும் இந்த ஊரணியை சுத்தம் செய்து சுற்று புறங்களில் கம்பி வேலிகள் அமைத்து குடிநீரை பாதுகாக்க வேண்டும். பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில் குடிநீர் கிடைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறிய கருத்துக்கள் வருமாறு:-

இரும்பு கம்பி வேலி அமைக்க வேண்டும்

முக்கண்ணாமலைப்பட்டியை சேர்ந்த ரகுமத்துல்லா கூறுகையில், முக்கண்ணாமலைப்பட்டி மலை அடிவாரத்தில் அமைந்த அழகான குளம் இந்த தாமரை ஊரணியாகும். 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ஊரணியான இவ்வூரணியை முக்கண்ணாமலைப்பட்டி கிராமம் மட்டுமல்லாமல் அருகிலுள்ள பல்வேறு கிராம மக்களும் குடிநீருக்கு பயன்படுத்துகின்றனர். இந்த ஊரணி சரியான பராமரிப்பின்றி கால்நடைகள் குடிநீருக்கு இறங்குவதும், குளிப்பதும் கழிவுகள் சேர்வதாலும் சுகாதாரமின்றி உள்ளது. இதனால் சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் மக்கள் இந்த நீரையே பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த குளத்தை பாதுகாக்க சுற்றிலும் இரும்பு கம்பி வேலி அமைத்து ஆடுமாடுகள் இறங்காமலும் குளத்தில் கழிவுகள் சேராமலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

கால்நடைகள் உலாவுகின்றது

சாந்தி கூறுகையில், தாமரைகுளம் ஊரணி தண்ணீரை எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து இன்று வரை குடிக்கிறேன். இந்த தண்ணீர் சுவை மிகுந்த தண்ணீராகும். தற்போது மலை பகுதியில் அதிக அளவு கால்நடைகள் உலாவுகின்றது. இதனால் அதன் கழிவுகள் குளத்திற்குள் விழுந்து தண்ணீர் வீணாகின்றது. இதனை தடுத்தால் போதுமானது என்றார்.

தண்ணீரை வடிகட்டி பிடிக்கின்றோம்

ஆசியாபானு கூறுகையில், இந்த ஊரணி தண்ணீரில் திருமணம் செய்த மாலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொட்டுகின்றனர். இதனால் தண்ணீர் வீணாகிறது. துர்நாற்றம் வீசுகிறது. இந்த ஊரணிக்குள் ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் தொட்டியை வெளியே வைத்து தண்ணீர் பிடிக்கிறோம். அதிலும் குப்பைகள் தூசிகள் அதிக அளவு வருகிறது. இதனால் குழாயில் பிடிக்கும் தண்ணீரை கூட துணியால் வடிகட்டி பிடிக்கின்றோம் என்றார்.

தண்ணீருடன் குப்பைகளும் வருகின்றது

சொக்கன் கூறுகையில், இந்த ஊரணிக்கு அருகில் வசித்து வருகிறேன். பல ஆண்டுகளாக குடிப்பதற்கும், சமைப்பதற்கும் இந்த தண்ணீரை பயன்படுத்துகின்றோம். தற்போது ஒரு குடம் தண்ணீரை எடுத்து வந்து வடிகட்டினால் அதில் கழிவுகளுடன், குப்பைகளும் அதிகமாக உள்ளது என்றார்.


Next Story