வேலூரில் குடிநீருக்காக தவிக்கும் மக்களின் தாகம் தீர்க்கப்படுமா?அரசின் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வேதனை


வேலூரில் குடிநீருக்காக தவிக்கும் மக்களின் தாகம் தீர்க்கப்படுமா?அரசின் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வேதனை
x

வேலூரில் குடிநீருக்காக தவிக்கும் மக்களின் தாகம் தீர்க்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

வேலூர்

வேலூரில் குடிநீருக்காக தவிக்கும் மக்களின் தாகம் தீர்க்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

வீடற்றோருக்கு வீடு

வேலூர் மாவட்டத்தில் வீடற்றோர் மற்றும் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் குடியிருப்புகள் கட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு இடங்களில் இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வீடுகள் அரசு தொகை நிர்ணயித்து அதை செலுத்துபவர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த வீடுகள் பெற தகுதி உடையவர்கள் மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளித்து, அதன் மூலம் களவிசாரணை மேற்கொள்ளப்படும். பின்னர் அரசு நிர்ணயித்துள்ள தொகையை செலுத்த தயாராகும் நபர்களுக்கு வீடுகள் வழங்கப்படும். அதன்படி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

குடிநீருக்கு தவிப்பு

இந்த திட்டத்தின் கீழ் வேலூர் முத்துமண்டபம் அருகே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகள் கடந்த 2019-ம் ஆண்டு தகுதியுடைய நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரசு நிர்ணயித்த தொகை செலுத்திய விண்ணப்பதாரர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் தவணை முறையில் பணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. அதன்படி தவணை முறையில் பணம் செலுத்தி தகுதியுடைய பொதுமக்கள் வீடுகளை பெற்றனர். இதில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தள வீடுகள் ஒதுக்கப்பட்டது. தற்போது அங்கு 6 கட்டிடங்களில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்கு பெரும்பாலும் கூலி வேலை செய்யும் ஏழை, எளிய மக்களே வசித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு போதுமான குடிநீர் வசதி இல்லாத நிலை நீடிக்கிறது. குடிநீருக்காக அவர்கள் சிறிது தூரம் தொலைவில் உள்ள டோபிகானா சலவைத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் தொட்டியில் நீர் எடுக்கும் நிலை உள்ளது. தினமும் அவர்கள் நீர் எடுப்பதற்காக குடும்பத்துடன் காலி குடங்களுடன் அங்கு செல்கின்றனர். தொட்டியில் இருந்து நீர் எடுத்து வீட்டுக்கு தூக்கிச் செல்கின்றனர். பின்னர் அந்த நீரை பயன்படுத்தி சமையல் செய்த பின்னரே தொழிலாளர்கள் வேலைக்கும், மாணவர்கள் பள்ளி கல்லூரிக்கும் செல்கின்றனர்.

போராட்டத்துக்கு தீர்வு கிடைக்குமா?

ஒரு கட்டிடத்துக்கு பொதுவான ஒரு குழாய் வீதம் 6 கட்டிடத்துக்கும் அமைத்து கொடுக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த கோரிக்கை அவர்கள் குடியேறியதில் இருந்தே உள்ளது. இதற்காக அவாகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். எனினும் அவர்களுக்கு குடிநீர் கிடைத்தபாடில்லை.

இதனால் அவர்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர். குடிநீர் வேண்டி பலமுறை குடிசை மாற்று வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு குடிநீர் குழாய் அமைக்கப்படவில்லை. ஒரு சமயம் ஆய்வுக்கு சென்ற கலெக்டர் குமாரவேல்பாண்டியன் மற்றும் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆகியோரை காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு முறையிட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி அவர்கள் முறையிட்டார்.

குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கூறுகையில், குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் வழங்கப்படும் என்கின்றனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

அரசின் திட்டத்தில் எங்களுக்கு வீடுகள் கிடைத்தது. ஆனால் அத்தியாவசிய தேவையான குடிநீர் என்பது இல்லாத நிலை நீடிக்கிறது. இங்கு வசிப்பவர்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்படும் மக்களே. குடிநீருக்காக நடந்து சென்று ஒரு தொட்டியில் இருந்து இருந்து தண்ணீரை எடுக்கிறோம். நாங்கள் அனைவரும் வீட்டுக்கு ஒரு குழாய் கேட்கவில்லை. ஒரு குடியிருப்பு கட்டிடத்துக்கு ஒரு பொது குழாய் அமைக்க தான் போராடுகிறோம்.

எங்கள் வீடுகளில் பிற தேவைகளுக்கு தண்ணீர் வசதி உள்ளது. ஆனால் குடிநீர் இல்லாததால் தண்ணீரை சிலர் விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. எங்கள் பகுதியில் மிக அருகிலேயே மேட்டூர் காவிரி கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று மையம் அமைந்துள்ளது. எனினும் எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாநகராட்சி தயார்

குடியிருப்பு பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்காதது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், குடியிருப்பை சேர்ந்த அனைவருக்கும் தனித்தனியாக கூட மாநகராட்சி சார்பில் காவிரி கூட்டுகுடிநீர் வினியோகிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் அதற்கு சில நடைமுறைகள் உள்ளது. குடிநீர் பெறுவர்களுக்கு முதலில் குடிநீருக்காக வரி விதிப்பு எண் வேண்டும். அதற்கு முன்பணமும் கட்டவேண்டும். இதற்கான பணம் செலுத்தப்பட்டால் உடனடியாக இணைப்பு வழங்கப்படும். வீடுகளுக்கு இணைப்பு தேவையில்லாத பட்சத்தில் பொது குழாய் அமைக்கவும் நாங்கள் தயார். ஆனால் அதற்கு குடிசை மாற்று வாரியம் குடிநீருக்கான தேவை குறித்து முறைப்படி எங்களிடம் தெரிவிக்க வேண்டும். மேலும் முன்பணமும் செலுத்த வேண்டும். அதை செலுத்திய பின்னர் உடனடியாக குடிநீர் வழங்கப்படும்.

குடிநீரை பொறுத்தவரை மாநகராட்சி மாதத்துக்கு சுமார் ரூ.2 கோடி வரை கட்டணம் செலுத்துகிறது. எனவே மாநகராட்சி இந்த நடைமுறையை பின்பற்றி வருகிறது என்றனர்.

தண்ணீர் பிரச்சினையில் தவித்து வரும் பொதுமக்களின் தாகம் தீர்க்கப்பட வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story