யானைகளை அழைத்துவர பயன்படுத்தும் லாரி பராமரிக்கப்படுமா?


யானைகளை அழைத்துவர பயன்படுத்தும் லாரி பராமரிக்கப்படுமா?
x

முதுமலையில் யானைகளை அழைத்து வர பயன்படுத்தும் லாரி பராமரிக்கப்படுமா? என வன ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்,

முதுமலையில் யானைகளை அழைத்து வர பயன்படுத்தும் லாரி பராமரிக்கப்படுமா? என வன ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மீட்பு லாரி

முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக, முதுமலையில் இருந்து கும்கி யானைகள் பல்வேறு இடங்களுக்கு வனத்துறை லாரியில் கொண்டு செல்வது வழக்கம்.

தொடர்ந்து காட்டு யானையை பிடிக்கும் பட்சத்தில் வனத்துறையின் மீட்பு லாரியில் முதுமலை முகாமுக்கு கொண்டு வந்து கும்கியாக மாற்றப்படுகிறது. இந்த நிலையில் போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை லாரி மிகவும் பழுதடைந்தது. தொடர்ந்து வனத்துறையினர் பராமரிப்பு பணி மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள லாரி ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

பயனற்று நிற்கும் அவலம்

இந்த லாரிக்கு பதிலாக பிற மாவட்டங்களில் உள்ள வனத்துறை லாரியை வரவழைத்த, யானைகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் எரிபொருள் உள்பட கூடுதல் செலவினங்கள் ஆகிறது. நல்ல நிலையில் உள்ள லாரி பழுது பார்க்காமல் நிறுத்தி வைக்கப்படுவதால், பயனற்று வீணாகும் அவல நிலை காணப்படுகிறது. எனவே, வனத்துறை அதிகாரிகள் லாரியை பராமரித்து இயக்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து உள்ளனர்.

இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறும்போது, நல்ல நிலையில் இருந்த லாரி பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால் 3 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு தொடர் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வீணாகி வருகிறது. இதனால் அரசின் பணம் வீணாகும் நிலை. இனிவரும் நாட்களில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story