குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படுமா?


குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தூர்வாரும் பணி

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் காவிரிடெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என ஆண்டுக்கு முப்போகம் நெல் விளைவிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு இன்று (திங்கட்கிழமை) மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை வரை பாசனத்துக்காக தங்கு தடையின்றி சென்று சேருவதற்காக இந்த ஆண்டும் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறு, வாய்க்கால்கள், வடிகால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணியை கடந்த 9-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குறுவை தொகுப்பு திட்டம்

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தற்போது குறுவை நெல் சாகுபடிக்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்கூட்டியே ஆழ்குழாய் பாசனத்தை வைத்து பணிகளை தொடங்கினாலும், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் தொடர்ந்து சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளுக்கு உதவும் வகையிலும், குறுவை சாகுபடி பரப்பை அதிகப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழக அரசு, குறுவை நெல் சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் அறிவித்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் குறுவை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு குறுகிய கால நெல்ரக சான்று விதைகள், உரங்கள், வேளாண் எந்திரங்கள் வழங்கப்படுகிறது. இந்த குறுவை நெல் சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தினால் குறுவை சாகுபடி பரப்பளவும் அதிகரித்து வருகிறது. 38 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு 1 லட்சத்து 82 ஆயிரத்து 40 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டதற்கு குறுவை நெல் சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டமும் ஒரு காரணம்.

விவசாயிகள் எதிர்பார்ப்பு

இதனால் இந்த ஆண்டும் குறுவை நெல் சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் கூறும்போது, குறுவை நெல் சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டமானது சிறு, குறு விவசாயிகளை ஊக்கப்படுத்தக்கூடிய அற்புதமான திட்டம். கடந்த ஆண்டு ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு விதைநெல், உரங்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என எதிர்பார்த்து இருக்கிறோம். கடந்த ஆண்டு டோக்கன் வழங்கப்பட்டு, நடவு பணி முடிந்தபிறகு விதைநெல், உரங்கள் கொடுத்தார்கள். எனவே இந்த ஆண்டு முன்கூட்டியே இந்த திட்டத்தை அறிவித்து விதைநெல், உரங்கள் அனைத்தையும் நடவு பணிக்கு முன்பே கொடுக்க வேண்டும்.

இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறுவை நெல் சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்தால் மட்டுமே இந்த இலக்கை எட்ட முடியும். இல்லையென்றால் குறுவை சாகுபடி பரப்பு குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் சிறு, குறு விவசாயிகளால் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே காலதாமதம் இன்றி உடனடியாக குறுவை நெல் சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றார்.


Next Story