குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் சீரமைக்கப்படுமா?
கிராமப்புறங்களில் பயன்பாடின்றி இருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
விழுப்புரம்:
பெரும்பாக்கம், கெடார் ஊராட்சிகளில் கடந்த 2019-2020-ம் ஆண்டு மாநில நிதிக்குழு மானியத்தில் இருந்து ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.
இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் 5 ரூபாய் நாணயம் போட்டால் சுமார் 25 லிட்டர் அளவுள்ள குடிநீர் வினியோகம் செய்யப்படும். இந்த சுத்திகரிப்பு நிலையத்தை பெரும்பாக்கம், கெடார் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் குடிநீர் தேவைக்காக தினந்தோறும் பயன்படுத்தி வந்தனர்.
பயன்பாடற்ற நிலையில்
மேலும் இந்த கிராமங்களில் ஏதேனும் சுப நிகழ்ச்சிகள் நடந்தால் அதற்கும் இங்குள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வந்து மொத்தமாக குடிநீர் பிடித்து செல்லவும் மிகவும் வசதியாக இருந்தது. அதுமட்டுமின்றி வெகுதூரம் வாகனங்களில் செல்பவர்களுக்கும் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கும் வருவாய் கிடைத்தது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இங்குள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், மின் மோட்டார் பழுது காரணமாக பயன்படுத்த முடியாமல் வெறும் காட்சிப்பொருளாக மாறியுள்ளது. இதுபோன்று பல்வேறு கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையமும் மக்கள் பயன்பாடின்றி இருந்து வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஊராட்சி நிர்வாகத்திற்கு வர வேண்டிய வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது.
சீரமைக்கப்படுமா?
எனவே கிராமப்புறங்களில் இதுபோன்று பயன்பாடின்றி இருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை சீரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.