கோரையாறு பாலம் எதிரே உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி தொடங்கப்படுமா?


இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பெண்கள் அச்சமடைந்து வருவதால் கோரையாறு பாலம் எதிரே உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி தொடங்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பெண்கள் அச்சமடைந்து வருவதால் கோரையாறு பாலம் எதிரே உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி தொடங்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

கோரையாறு பாலம்

கூத்தாநல்லூர் அருகே திருவாரூர், மன்னார்குடி சாலையில் உள்ளது கோரையாறு பாலம். இந்த பாலத்தையொட்டி தென்கோவனூர் சாலை, மன்னார்குடி சாலை, லெட்சுமாங்குடி சாலை என மூன்று பிரிவு சாலைகள் அமைந்துள்ளது. இந்த கோரையாறு பாலம் பஸ் நிறுத்தமாகவும் இருந்து வருகிறது.

கோரையாறு, தென்கோவனூர், வாக்கோட்டை, தெற்குபடுகை, வடகோவனூர், குடிதாங்கிச்சேரி, திருராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் இந்த கோரையாறு பாலம் பஸ் நிறுத்தத்தில் கூத்தாநல்லூர், மன்னார்குடி, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு வேலைக்கு சென்று விட்டும் பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரத்தில் பஸ்களில் இருந்து இறங்கி நடந்து செல்ல வேண்டியும் உள்ளது.

வழிப்பறி சம்பவம்

இரவு நேரங்களில் கோரையாறு பாலம் பஸ் நிறுத்தம் உள்ள பகுதியில் இருள் சூழ்ந்து உள்ளது.இதனால் அந்த பகுதியில் இரவு நேரங்களில் செல்ல பெண்கள் அச்சம் அடைகின்றனர்.

மேலும், குறிப்பிட்ட பகுதியில் வீடுகள் மற்றும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் அடிக்கடி வழிபறி சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்த இடத்தில் அதிகளவில் வெளிச்சம் தரக்கூடிய உயர்கோபுர மின் விளக்கு அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பாதியில் நிறுத்தப்பட்டது

இதை தொடர்ந்து கோரையாறு பாலம் பஸ் நிறுத்தம் எதிரில் உயர் கோபுரம் மின்விளக்கு அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதில் உயர் கோபுரம் அமைக்க மண்ணில் தளம் போடப்பட்டது. ஆனால் என்ன காரணமே என்பது தெரியவில்லை பணி பாதியில் நிறுத்தப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணியை தொடங்கவில்லை என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

உயர்கோபுர மின்விளக்கு

இரவு நேரத்தில் கோரையாறு பாலம் பஸ் நிறுத்தத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த வழியாக செல்லவே பெண்கள் அச்சப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட உயர்கோபுரம் மின்விளக்கு அமைக்கும் பணியை உடனடியாக தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story