களக்காட்டில் வாழைத்தார் சந்தை அமைக்கும் பணி விரைவுபடுத்தப்படுமா?


களக்காட்டில் வாழைத்தார் சந்தை அமைக்கும் பணி விரைவுபடுத்தப்படுமா?
x

களக்காட்டில் வாழைத்தார் சந்தை அமைக்கும் பணி விரைவுபடுத்தப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் விளையும் வாழைத்தார்களுக்கு மவுசு அதிகம். கேரள மாநிலத்தில் உள்ள சந்தைகளில் களக்காடு வாழைத்தார்களுக்கு தனி கிராக்கி உள்ளது. இதையொட்டி களக்காடு பகுதிகளில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழைகள் பயிர் செய்யப்பட்டு வருகின்றன. பல்வேறு ரக வாழைகள் விளைவிக்கப்படுகிறது. இதில் ஏத்தன் ரகமும் உண்டு. சீசன் தொடங்கும் போது ஏத்தன் ரக வாழைத்தார் 1 கிலோ ரூ.40 வரை விற்பனை ஆகும்.

அடுத்த சில நாட்களில் இருந்தே வாழைத்தார் விலை இறங்குமுகமாகி விடும். வாழைத்தார்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவது தொடர் கதையாகி விட்டது. இதனால் ஆண்டுதோறும் வாழை விவசாயிகள் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர்.

சந்தை அடிக்கல் நாட்டு விழா

இதற்கு நிரந்தர தீர்வு காண களக்காட்டில் வாழைத்தார் சந்தை அமைத்து, அரசே நேரடியாக வாழைத்தார்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், அறுவடை காலத்தில் வாழைத்தார்களை சேமித்து வைக்க குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும் என்றும், விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு களக்காட்டில் வாழைத்தார் சந்தை அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.6¼ கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். அதன்படி களக்காடு அருகே ஜெ.ஜெ.நகரில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் 3 ஏக்கர் பரப்பளவில் வாழைத்தார் ஏல மையம் மற்றும் மதிப்பு கூட்டு மையம் அமைக்க திட்டமிடப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந் தேதி சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டி வைத்து சந்தை கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

ஆமை வேகத்தில்...

ஆனால், கட்டுமான பணிகள் மிகவும் மந்தமான முறையில் ஆமை வேகத்தில் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பணியை விரைவுபடுத்தி சந்தையைகட்டி முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுபற்றி பார்ப்போம்.

மேலபத்தையைச் சேர்ந்த விவசாயி முருகன்:- களக்காட்டில் வாழைத்தார் சந்தை அமைக்கப்பட உள்ளது. அதன் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதை கண்டு நாங்கள் அப்போதைய நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவிடம் மனு கொடுத்தோம். அதனைத் தொடர்ந்து தற்போதைய கலெக்டர் களக்காடு அரசு மருத்துவமனைக்கு வந்தபோது மறுபடியும் மனு கொடுத்தோம். 5 மாத காலம் ஆகியும் அதன் பணிகள், வாழைத்தார் அறுவடை சீசன் ஓரிரு இடங்களில் ஆரம்பமாகிய நிலையில் இன்னும் முடிவடையவில்லை என்பது என் போன்ற விவசாயிகள் மத்தியில் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. தற்போது சீசன் தொடங்கி ஜூன் மாதத்திற்குள் நிறைவடைந்து விடும். எனவே, போர்க்கால அடிப்படையில் பணியை விரைந்து முடித்தால் விவசாயிகள் நன்கு பயனடைவார்கள்.

துரிதப்படுத்த வேண்டும்

புதுத்தெருவை சேர்ந்த விவசாயி கனகராஜ்:- களக்காடு வாழ் மக்களின் வாழ்வாதாரம் விவசாயம். அதிலும் வாழை பயிர் தான் பணப்பயிராக இங்கு உள்ளது. இங்குள்ள வாழைதார்களுக்கு வெளிமாநிலங்களிலும் தனி சிறப்பு உண்டு. இரவு-பகலாக கஷ்டப்பட்டு பயிர் செய்து நல்ல விலை கிடைக்கவில்லை என்றால் எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படையும். அதற்குத்தான் களக்காட்டில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் சந்தை அமைக்க வேண்டும் என்று வெகு நாளாக கோரிக்ைக வைத்தோம். இந்த நிலையில் தற்போது கட்டப்பட்டு வரும் சந்தை, இந்த வருடம் சீசனுக்கு பயன் தரும் வகையில் அதன் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

மஞ்சுவிளையை சேர்ந்த விவசாயி சில்கிஸ் சாமுவேல்:- வெகு காலத்திற்குப் பிறகு களக்காட்டில் வாழைத்தார் சந்தை வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு வருடமும் நாங்கள் வியாபாரிகளை நம்பி, அவர்கள் கேட்கும் விலைக்கே கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் வருவாய் மிகவும் பாதித்தது. மேலும் இயற்கை சீற்றங்களினால் (காற்று போன்றவை) வாழைகள் சேதமடையும் போது விலை மிக மிக குறைவாக இருக்கும். தற்போது சந்தை வந்திருப்பதால் வாழைத்தார்களை குடோனில் சேகரித்து வைத்துக்கொண்டு நல்ல விலை கிடைக்கும் போது விற்பதற்கு ஏதுவாக இருக்கும். எனவே சந்தை கட்டுமான பணிகளை துரிதப்படுத்தினால் தற்போது உள்ள சீசனில் விவசாயிகள் அனைவரும் மிகவும் பயன் பெறுவர்.

வாழ்வாதாரம் பாதிப்பு

கக்கன் நகரைச் சேர்ந்த விவசாயி கார்த்திக்:- வாழை ஒன்றிற்கு செலவாகும் தொகை குறைந்தபட்சம் ரூ.150. தற்போது வியாபாரிகள் எங்களிடம் கிலோ 22 ரூபாய் நிர்ணயம் செய்து வாங்கி செல்கின்றனர். அதனால் எங்களது உழைப்பு மற்றும் முதலீடு நஷ்டம் ஆகிறது. இது எங்கள் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்க செய்கிறது. வங்கிகளில் கடன் பெற்று விவசாயம் செய்யும் பொழுது அதனை செலுத்த முடியாமல் தவிக்கும் அவல நிலையும் ஏற்படுவது உண்டு. இந்த வருடம் இப்படிப்பட்ட நிலை வராதபடி, சந்தையில் நடக்கும் கட்டிட பணிகளை விரைந்து முடித்து எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உதவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story